Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 அரையாண்டு தேர்வு ரத்தா? : அதிகாரிகள் மெத்தனத்தால் குழப்பம்

பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள், இன்று நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவையொட்டி, மூன்று நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால், டிச., 7ல் துவங்க வேண்டிய, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு நடக்கவில்லை. இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிளஸ் 2 அரையாண்டு தேர்வு நடக்குமா என்பது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிடவில்லை. 

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில், கல்வித் துறை செயலர் சபிதா ஈடுபட்டிருந்ததால், அவரிடம் அனுமதி பெற முடியவில்லை என, கூறப்படுகிறது. அதிகாரிகளின் மெத்தனத்தால், அரையாண்டு தேர்வு எப்போது என தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 'ஆங்கிலம் முதல் தாள் தேர்வை, இன்று நடத்துங்கள்' என, சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், மாணவர்களுக்கு, எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், ''பள்ளிக் கல்வி அதிகாரிகளின் மெத்தனமான செயல், வருத்தத்தை தருகிறது. ''ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும் அதிகாரிகள், தேர்வை எழுதப் போகும் மாணவர்களுக்கு தான், முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். எனவே, அரையாண்டு தேர்வு தேதியை, புதிதாக அறிவிக்க வேண்டும்,'' என்றார். 

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறுகையில், ''விடுமுறைக்கு பின், எந்த தேர்வு நடக்கும் என்பதை, மாணவர்களுக்கு அறிவித்திருந்தால், அவர்கள் தேர்வுக்கு தயாராகியிருப்பர். இந்த குழப்பத்தை தவிர்க்க, பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான புதிய தேதியை நிர்ணயிக்க வேண்டும்,'' என்றார்.

தனியார் பள்ளிகளை பாருங்கள்! : தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, அனைத்து மாணவர்களுக்கும், டிச ., 9ல், எந்த தேர்வு நடக்கும் என்பதை, மொபைல் போன் குறுஞ்செய்தி மற்றும் 'இ - மெயில்' வாயிலாக தெரிவித்து விட்டன. அதனால், மூன்று நாள் விடுமுறையை வீணடிக்காமல், அந்த மாணவர்கள் தேர்வுக்கு தயாராகியுள்ளனர்.

தனியார் பள்ளிகளை பார்த்தாவது, அரசு பள்ளிகளை நிர்வகிக்கும் கல்வித் துறை அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement