Ad Code

Responsive Advertisement

TET : 3,000 ஆசிரியர்கள் பணியைத் தொடர்வதில் சிக்கல்.

கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஆசிரியர்கள் அடுத்த மாதம் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


கடந்த 2011-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழகம் முழுவதும் சுமார் 3,000 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2011-இல் பணி நியமனம் செய்யப்பட்ட இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆசிரியர்களின் 5 ஆண்டு பணிக் காலம் அரசு உத்தரவுப்படி இந்த ஆண்டு, நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.

இதனால், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல் தமிழகம் முழுவதும் சுமார் 3,000 ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசின் உத்தரவில் இதுகுறித்து தெளிவான விளக்கம் இல்லாததால், அந்தப் பள்ளிகளில் பணி யாற்றுவோரும் குழப்பத்தில் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 3,000 ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுத கால நீட்டிப்பு செயய் வேண்டும். இல்லையெனில், தங்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement