Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களிடம், மாணவர்கள் அதிகப்பற்றுடன் நடந்து கொள்ள வேண்டும்: சகாயம் அறிவுரை

'நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாக தேர்ச்சி பெற முடியும்' என ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார். 


கம்மாபுரம் அடுத்த இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில், மக்கள் பாதை இயக்கம் சார்பில் மாணவர்கள் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, துணை சேர்மன் கனகசிகாமணி, ஊராட்சித் தலைவர் கதிரொளி, மக்கள் பாதை இயக்க நிர்வாகி கேசவபெருமாள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். நிர்வாகிகள் சண்முகம், புஷ்பராஜ், கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், தலைமை தாங்கி, பேசியதாவது:
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் வேலை செய்தாலும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளதா என ஆய்வு செய்து, அங்குள்ள பிரச்னைகளை தீர்ப்பதையே கடமையாக கொண்டுள்ளேன். அரசு மூலம் கட்டப்படும் பள்ளி கட்டடங்கள் தரமாக கட்டப்படுகின்றனவா, சாலைகள் தரமாக போடப்படுகின்றனவா என ஆய்வு செய்து, அவற்றை தரமாக அமைப்பதில் முழு வீச்சில் செயல்படுகிறேன்.
தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெற்றோர்களை டாடி, மம்மி என கூப்பிடும் போது மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் தமிழ் மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் கற்பிக்க வேண்டும். அவர்களுக்கு தரமான கல்வி அரசு பள்ளிகளில் வழங்கப்படுகிறது. கடந்த 2011ல் மதுரையில் பணியாற்றிய போது, தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி தேர்ச்சியும், மதிப்பெண் இருக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டேன். அதன்படி, மாலை வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி, ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டது.
அப்துல்காலம் 'எனது உள்ளம் கவர் நாயகர் என்றால் எனக்கு ஆரம்ப கால படிப்பில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் தான்' என்றார். எனவே, மாணவர்களாகிய நீங்கள் அதிகப்பற்றுடன் ஆசிரியர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., விஞ்ஞானிகளாக மாறும் சக்தியும், ஆற்றலும் உங்களிடம் உள்ளது. நானும் உங்களை போல் அரசு பள்ளியில் படித்து தான் கலெக்டராக உள்ளேன்.
கடந்த 2009ல் பொது தேர்வு முடிவுகள் வெளி வந்தபோது, அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் கதிர்வேல், ராஜ்கமல் இருவரும் 500க்கு 499 மதிப்பெண் எடுத்தனர். இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் 27 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கலாம். ஆனால் அவர்கள் இருவரும் அந்த தொகையை வாங்க மறுத்துவிட்டனர். ஏன் என கேட்டதற்கு நாங்கள் இருவரும் அரசு பள்ளியிலேயே படிக்க விரும்புகின்றோம் என்றனர். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.
அவர்கள் அரசு பள்ளியில் மேல் படிப்பு படித்து, 2011ல் பிளஸ் 2 பொது தேர்வில் ராஜ்கமல் 1,171, கதிர்வேல் 1,167 மதிப்பெண் எடுத்தனர். நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாக தேர்ச்சி பெற முடியும். அதே போல் மதிப்பெண் எடுக்க முடியும்.
மக்கள் பாதை என்பது ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவும், தமிழ் வழியில் படிப்பதால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை போக்க உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கணினி, டேபிள், சேர், மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement