Ad Code

Responsive Advertisement

மாற்றுத் திறனாளிகள் பயன்பெற பொது இணைய சேவை மையம்: தமிழக அரசு அறிவிப்பு.

கல்வி உதவித் தொகை உள்பட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளைப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதற்காக பொது இணைய சேவை மையங்கள் தொடங்கப்படும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப் பேரவையில் சமூக நலம்-சத்துணவுத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத்துறையின் அமைச்சர் வி.சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:

மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் பொது இணைய சேவை மையம் தொடங்கப்படும். விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்டு பொது சேவை மையங்களின் இணையதள வழி மூலம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான சேவை ரசீது எண்,ஒப்புகைச் சீட்டு, உதவி வழங்கப்படும் உத்தேச தேதி போன்ற விவரங்கள் விண்ணப்பதாரருக்கு அளிக்கப்படும்.மாவட்ட மின்னணு முறை திட்டத்தின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பமானது, அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்-மருத்துவ அலுவலருக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் விரைந்து வழங்கப்படும்.இந்த முறையின் மூலம் மாவட்ட ஆட்சியர் உள்பட அனைத்து நிலைகளிலும் வெளிப்படையாக துரிதமாக பணிகள் நடைபெற வழி ஏற்படும். மேலும், மாற்றுத் திறனாளிகள் மாவட்ட தலைமையிடம் செல்வதும் தவிர்க்கப்படும்.

குரூப் 1 தேர்வு: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.தமிழகத்தில் 23 அரசு சிறப்புப் பள்ளிகளில் ஆயிரத்து 500 மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். இதற்கென ரூ.12 லட்சத்தில் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும். அரசின் நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் 78 ஆரம்பகால பயிற்சி மையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

அதில் பணியாற்றும் சிறப்பாசிரியர்கள், பராமரிப்பாளர்களுடன்மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. எனவே, மாவட்ட அளவில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாவட்டத்துக்கு ஒரு விழிப்புணர்வுநிகழ்வுக்கு ரூ.20 ஆயிரம் வீதம், 32 மாவட்டங்களில் தெருமுனை நாடக நிகழ்வுகள், சாலை விளக்க நிகழ்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் வி.சரோஜா அறிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement