Ad Code

Responsive Advertisement

தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும்: கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாட்டில் தரம் குறைந்த பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த அம்மூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கூட்டத்துக்கு தமிழ்நாட்டு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை வகித்தார். மாநாட்டில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி, சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் தாய் மொழிக் கல்வியின் அவசியம் குறித்து விளக்கினர்.

அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கலந்துகொண்டு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழே கல்வி மொழியாக்கப்பட வேண்டும். அரசு, தனியார் துறைகளில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியிலும் தமிழ்வழியில் படித்தோருக்கே முன்னுரிமை அளித்து 100 விழுக்காடு ஒதுக்கீடு செய்யவேண்டும். தமிழ்நாட்டில் தரமற்று இருக்கும் அரசுப் பள்ளிகளை தரப்படுத்தி அனைவருக்கும் இலவசக் கல்வியை அளிக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளிலேயே பயில வேண்டும். இந்திய அரசின் வேலைவாய்ப்புகள், உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழிலேயே எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement