Ad Code

Responsive Advertisement

ஆசிரியை வினுபிரியா தற்கொலை எதிரொலி- பேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி? பெண்களுக்கு சைபர் கிரைம் போலீசார் ஆலோசனை

பள்ளி ஆசிரியை வினுபிரியா தற்கொலை எதிரொலியாக பேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி என பெண்களுக்கு சைபர் கிரைம் போலீசார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.  சேலம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கண சாலையை சேர்ந்த பி.எஸ்.சி பட்டதாரியான ஆசிரியை வினுப்பிரியாவின் (21) மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம் பேஸ்புக்கில் வெளியானது. 


இதைத் தொடர்ந்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது தொடர்பாக சேலம் கல்பாரப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (22) என்பவர் கைது செய்யப்பட்டார். இவரே, வினுபிரியாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டவர்.ஒரு பெண்ணின் புகைப்படத்திலுள்ள தலையை அகற்றி அதை இன்னொரு பெண்ணின் புகைப்படத்தில் பொருத்தி அந்த படத்தை சமூக விரோதிகள் பேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள். இதுதான் மார்பிங் படம். இதை அழிப்பது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் அளித்துள்ள ஆலோசனை:

பெண்கள் தங்களது ஆபாச படத்தை பேஸ்புக்கில் பார்த்தால் உடனடியாக அந்த படத்தின் மேல் வலது பக்கத்திலுள்ள அம்புக் குறியை அழுத்தினால் ‘‘ரிப்போர்ட் போட்டோ” என்ற ஒரு ஆப்சன் வரும். அதை நீங்கள் கிளிக் செய்துவிட்டால் 72 மணி நேரத்தில் அந்த ஆபாச புகைப்படம் பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டு விடும். அதே போல் பேஸ்புக்கிலுள்ள ‘‘ஹெல்ப் சென்டர்” உபயோகித்து புகார் செய்தால் அந்த ஆபாச படம் நிச்சயம் நீக்கப்பட்டு விடும்.


ஒரு வேளை பேஸ்புக்கை தவிர வேறு வெப் சைட்டில் உங்கள் ஆபாச புகைப்படம் வந்தால் ‘‘கான்டெக்ட் யூஸ்” என்ற ஆப்சனுக்கு சென்று, நீங்கள் புகார் செய்தால் அந்த ஆபாச படம் அல்லது வீடியோ உடனே நீக்கப்பட்டு விடும். இந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காத பட்சத்தில் நீங்கள் காவல்துறையிடம் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான் குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் வேறு யாருக்காவது கெடுதலை செய்வதற்கு முன் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க முடியும்.

பேஸ்புக்கில் ‘‘பிரைவெட் செட்டிங்ஸ்” என்ற ஒரு வசதி உள்ளது. அதை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரும் உங்கள் புகைப்படங்களை பார்க்க இயலாது. இணைய தளத்தில் உங்கள் புகைப்படத்தை பகிர்வு செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் பகிர்வு செய்ய வேண்டும். மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே உங்கள் புகைப்படத்தை பகிர வேண்டும்.


பேஸ்புக்கில் பெண்கள் தனியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்யக்கூடாது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவேண்டும். காரணம் இப்படிப்பட்ட புகைப்படத்திலிருந்து ‘‘மார்பிங்” செய்வது மிகவும் கடினம். யாராவது பெண்களை புகைப்படம் எடுத்தால் அதை தடுத்து நிறுத்துங்கள். இந்த புகைப்படங்கள் ஆபாச புகைப்படங்களாக மார்பிங் செய்யப்படலாம். - 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement