Ad Code

Responsive Advertisement

'கணினித் தமிழ்' மொழியில் இணையதளம் வடிவமைக்க 'மென்பொருள்' பயிற்சி

கணினித் தமிழ்' மொழி மூலம் இணையதளம் வடிவமைப்பதற்கான 'மென்பொருள்' பயிற்சியை மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு வழங்க உள்ளதாக, உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) மாநாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.


காந்திகிராம பல்கலை, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்ற நிறுவனம் இணைந்து நடத்தும், 15வது உலகத்தமிழ் இணைய மாநாடு காந்திகிராம பல்கலையில் நடக்க உள்ளது. செப்., 9, 10 மற்றும் 11ல் மாநாடு நடக்க உள்ளது.


கணினித் தமிழ் மொழியில் தொழில்நுட்ப வளர்ச்சி, கணினி அறிவியல் ஆய்வு, எந்த மொழி எழுத்துக்களையும் தமிழில் மொழி பெயர்ப்பதற்கான கணினித் தொழில்நுட்ப ஆய்வு, எழுத்திலிருந்து பேச்சு, ஒளியின் மூலம் தமிழ் எழுத்துக்கள் உருவாக்கும் தொழில்நுட்பம், கணினி, மடிக்கணினிகளில் செயலிகள் தமிழ் வழி தொழில்நுட்பமாக மாற்றுதல் உள்ளிட்டவை குறித்து கருத்தரங்குகளில் ஆலோசிக்கப்பட உள்ளது.


மக்கள் அரங்கம்
செப்., 8ல் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கும் 'அலைபேசிகளில் குறுஞ்செயலி' (மொபைல் ஆப்ஸ்) உருவாக்குவதற்கான கணினித்தமிழ் மொழி மூலம் பயிற்சி, இணையதளம் உருவாக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.


கண்காட்சி
பள்ளி முதல் பல்கலை வரை எல்லோரும் பயனடையும் வகையில் கணினி தமிழ் விசைப்பலகை, கணினி செயலிகள் குறித்த தகவல்கள் அடங்கிய குறுந்தகடுகள், தமிழ் கற்க உதவும் நுால்கள், பிரெய்லி புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், புகழ்பெற்ற 60 நிறுவனங்கள் மூலம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.


காந்திகிராம பல்கலை துணை வேந்தர் நடராஜனுடன், மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து 'உத்தமம்' மாநாட்டுக் குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
பின், குழு நிர்வாகிகள் இனியநேரு, செல்வமுரளி, ராமகிருஷ்ணன், நெடுஞ்செழியன், துரைமணிகண்டன், லோகசுந்தரம், பத்மநாபபிள்ளை கூறியதாவது: இணைய வழி கணினித் தமிழ் தொழில்நுட்ப முறைகளை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். மாநாட்டில் கணினித் தமிழ் மொழி மூலம் இணையத்தை வடிவமைக்கக்கூடிய தொழில்நுட்ப பயிற்சி அளிக்க உள்ளோம், என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement