Ad Code

Responsive Advertisement

பி.எட்., தேர்வு வினாத்தாள் வழங்க தாமதம்: தேர்வர்கள் பரிதவிப்பு

தருமபுரியில் நடைபெற்ற பி.எட்., தேர்வில், தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கவும், அறை ஒதுக்குவதிலும் நிகழ்ந்த தாமதத்தால் தேர்வர்கள் பரிதவிப்புக்குள்ளாகினர்.

கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க பி.எட்., தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுகள் விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.


தருமபுரி மாவட்டத்தில் பி.எட்., கல்லூரிகளில் பயின்று தேர்வெழுதும் தேர்வர்களுக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரி, மொரப்பூர், அரூர் பகுதிகளில் செயல்படும் தனியார் கல்லூரிகள் என 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் தருமபுரி அரசு கல்லூரியில் ஆயிரத்துக்கும் அதிகமான தேர்தவர்கள் தேர்வெழுதி வருகின்றனர். இந்தத் தேர்வுக்காக 40 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்வில், நூற்றுக்கணக்கான தேர்வர்களுக்கான அறை ஒதுக்கீடு செய்யுவும், வினாத்தாள் வழங்கவும் சுமார் 20 நிமிடம் தாமதமாக ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதனால், தங்களுக்கான அறையைக் கண்டுபிடித்து செல்லமுடியாமல் தவித்தனர். மேலும், வினாத்தாள் வழங்க ஏற்பட்ட தாமதம் குறித்து காரணமறியாது தேர்வர்கள் பதற்றமடைந்தனர்.

இதுகுறித்து தருமபுரி அரசுக் கல்லூரி முதல்வர் (பொ) கண்ணன் கூறியது:

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மாதம் முதல் தேர்வெழுதும் 1000 மாணவர்கள் தொடர்பான பட்டியல் மட்டுமே எங்களுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை (ஜூலை 2) அன்று காலை திடீரென 240 தேர்வர்கள் கூடுதலாக தருமபுரி கல்லூரியில் தேர்வெழுத உள்ளதாக தகவல் அனுப்பப்பட்டது.

இந்த 240 மாணவ, மாணவியர் குறித்த தகவல் எங்களுக்கு பல்கலைக்கழகம் மூலம் முன்னதாக அனுப்பி வைக்கப்படவில்லை.

எனினும், இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனே பல்கலைக் கழகத்துடன் தொடர்புகொண்டு பட்டியலைப் பெற்றோம். இதைத் தொடர்ந்து, ஆசிரியர்களை வரவழைத்து, அறைகள் ஒதுக்கீடு செய்து தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கினோம்.

இதனால் 15 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், தேர்வர்களுக்குப் பாதிப்பின்றி அந்த 15 நிமிடம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement