Ad Code

Responsive Advertisement

உலகின் சிறந்த கல்வி முறை எந்த நாட்டுடையது தெரியுமா? அங்கே கற்பித்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆசிரியராவது என்பது கனவு. அது பெரிதும் கொண்டாடப்படும்  பணி மட்டுமல்ல, மிகுந்த மதிப்பு வாய்ந்த பதவியும்கூட. ஆசிரியர்களின் சராசரி மாத வருமானம் டாக்டர்கள், என்ஜினீயர்களுக்கு நிகரானது. அனுபவம், முதிர்ச்சி அடிப்படையில் அவர்களது வருமானமும் உயர்ந்து கொண்டே வரும்.


ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். அந்த நாடு.. பின்லாந்து. இன்னும் சிலபல ஆச்சர்யங்கள் இருக்கின்றன,  தொடர்ந்து படியுங்கள்...

பின்லாந்தில் ஒரு குழந்தை பள்ளியில் சேரும் வயது என்ன தெரியுமா? ஏழு. ஆம் ஏழுவயதில்தான் கல்வி கற்கவே தொடங்குகிறார்கள். அதுவரை குழந்தைகள், குழந்தைகளாகவே இருக்கின்றனர். கல்வி ஓர் எளிமையான விளையாட்டு போல அவர்களுக்குள் புகுத்தப்படுகிறது.

முக்கியமாக நாம் பின்பற்றும் மனப்பாட முறை கல்வி கிடையாது. முதல் ஆறு வருடங்களுக்கு கற்கும் திறமையை அளவிடுதல் இல்லை, தேர்வு இல்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி அளவில் வீட்டுப்பாடம் என்பதுகூட அறவே கிடையாது.

இவ்வாறு ஒன்பது வருடங்கள் வரை பள்ளிப்படிப்பைத் தொடர்கின்றனர். பதினாறு வயதாகும்போதுதான் தேர்வு என்ற ஒன்றையே எதிர்கொள்கின்றனர். அதன் பின்னர் தனக்கான துறையை தேர்ந்தெடுத்து பயிலும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மாணவர்கள் அறிவானவர்கள் / திறமை குறைந்தவர்கள் என தகுதி பிரிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் ஒரே கல்வி முறை / கல்வியறைதான். கற்கும் திறன் குறைந்த மாணவர்களுக்கு அதை மேம்படுத்தும் விதத்தில் சற்று அதிக உதவிகள் மட்டும் செய்து தரப்படும்.

முதல் ஆறு வருடங்களுக்கு ஒரே ஆசிரியர். அந்தக் குழந்தைகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, நெறிப்படுத்தி, கல்வியைப் புகுத்தி வழி நடத்துதல் அவரது கடமை! 

அதிகபட்சம் ஒரு நாளில் நான்கு வகுப்புகள் மட்டுமே நடைபெறும். அதிலும் வகுப்புகளுக்கிடையே ஒரு மணி நேரம் இடைவெளி விடப்படும். ஆசிரியர்கள் வகுப்பறைகளில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா? வெறும் நாலு மணி நேரம்தான்.

வகுப்பறையில் அதிகபட்சம் பதினாறு மாணவர்களே இருப்பர். வெறுமனே சொல்லித்தருதலை விட செயல்முறைக் கல்வியே அதிகம். எனவே, நிஜ உலகில் நாம் செய்யும் (!) சமைத்தல், சுத்தம் செய்தல் முதற்கொண்டு எல்லா அடிப்படை வேலைகளையும் கற்றுத் தெளிகின்றனர்.

படைப்பாற்றலுக்கே அதிக முக்கியத்துவம். கற்றுக்கொள்வதை தனித்திறமையுடன் மேம்படுத்த போதிய ஊக்குவிப்பு, ஆசிரியர்களால் வழங்கப்படும். மாணவர்களுக்குள் போட்டியை உண்டாக்காமல், குழுவாக இணைந்து வெற்றி காணும் வழிமுறைகளே போதிக்கப்படுகின்றன.

முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் சிறந்து விளங்கும் பத்து சதவிகிதத்தினரே ஆசிரியராக முடியும். ஆசிரியர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொண்டே இருத்தல் அவசியம். இதனால் அவர்களது தகுதி மேம்பாட்டுக்காக வாரத்தில் இரண்டு மணி நேரம் செலவிடுகிறார்கள்.

அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசால் நிதியுதவி செய்யப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகள், அரசினால் நிதியுதவி செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கான உணவு, மருத்துவ வசதி போன்றவை முற்றிலும் அரசாலேயே அளிக்கப்படுகின்றன.

அரசின் பாடத்திட்டத்தில் வழிமுறைகள் மட்டுமே உண்டு. அதற்கான பயிற்சித் திட்டத்தை அந்தந்த ஆசிரியரே அவரது விருப்பப்படி வகுத்துக் கொள்ள வேண்டும். அவர் தம் மாணவர்களின் வளர்ச்சிக்கு அவர்களே பொறுப்பு. நம்பிக்கையே இந்த எளிமையான வழிமுறையை கட்டமைத்து வழிநடத்துகிறது!

யாருக்கும் யார் மீதும் சந்தேகம் இல்லை. இது நடக்குமா, ஒழுங்காக செய்கிறார்களா என சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல், அனைவரும் தன்னிச்சையாக வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.

மாணவன், தன் ஆசிரியர் தன்னை நல்ல முறையில் வழிநடத்துவார் என நம்புவது போல, மாணவன் முழு அர்ப்பணிப்போடு தன்னைத் தருவான் என ஆசிரியரும் நம்புகிறார். அதற்கேற்ற சூழ்நிலையும் சுதந்திரமும் அளிக்கப்படுகிறது. சமூகம், 'இந்த அரசு நல்ல கல்வியை தர அடிப்படை வசதிகளை செய்து தரும்' என நம்புகிறது.

இந்த நம்பிக்கை மிகச்சிறந்த முறையில் வேலை செய்கிறது.

மனனம் செய்து ஒப்புவிக்கும் மெக்காலே கல்விமுறையிலிருந்து நமது இந்தியா விடுதலை பெறும் நாள் எந்நாளோ..?!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement