Ad Code

Responsive Advertisement

அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10 சதவீதம் சரிவு.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவீத மாணவர்சேர்க்கை சரிவடைந்துள்ளதற்கு, பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களே காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, நகராட்சி, கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,408 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் (2015- 16) 1.22 லட்சம் மாணவர்கள் பயின்று வந்தனர். ஆனால், நிகழாண்டில் மாணவர்களின் சேர்க்கை சுமார் 10 சதவீதம் சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.மாவட்ட மற்றும் ஒன்றிய கல்வி அலுவலகத்திலிருந்து அதிக தொலைவில் உள்ள ஊரகப் பகுதிகளில் செயல்படும் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மற்றும் மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர்களின் வருகை மற்றும் பணித்திறன் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4.20 வரை பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறி, பல இடங்களில் 2 மணிக்கே பள்ளிகளை மூடி விடுகின்றனர். அதே போல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி வழங்காமல் இருக்கக் கூடாது என்ற விதிமுறை, பள்ளியில் கையெழுத்திட்டு விட்டு வீட்டுக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு வசதியாக மாறி விட்டது.

இதனால் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பலருக்கு தமிழ் எழுத்துக்கள் 247-ஐயும் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. இதுபோன்ற காரணங்களால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் கூட, தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். 860 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில், 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், 40 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் வீதம் பணியாற்றி வருகின்றனர். இலவசப் பாடப் புத்தகம், காலணி, சீருடை, மதியஉணவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்தாலும், சில ஆசிரியர்களின் பொறுப்பற்ற செயல்பாடு, அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது என நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு ஆசிரியர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா தெரிவித்தது:

 தமிழக அரசின் உத்தரவுப்படிமாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது, அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் விசாரணை நடத்தி, தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement