Ad Code

Responsive Advertisement

ஒரு மாணவிக்காக இயங்கிய அரசு பள்ளி 5 ஆண்டு சாதனை

மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி இயங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் 68 தொடக்கப்பள்ளிகள், 24 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை கண்காணிக்கவும், மாணவர் சேர்க்கையை வலியுறுத்தவும் நிர்வாக பணிகளுக்காக மானாமதுரையில் இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அடங்கிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.


கடந்தாண்டு மானாமதுரை ஒன்றியத்தில் 6ஆயிரத்து 718 மாணவ,மாணவிகள் கல்வி பயின்றனர். பெரும்பாலான கிராமப்புற பள்ளிகளில் மாணவ,மாணவியர்கள் எண்ணிக்கை குறைந்து இருந்தது. வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.


மானாமதுரை ஒன்றியம் செய்யாலுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக பிரேமா,உதவி ஆசிரியராக கந்தசாமி, துப்புரவு பணிகளுக்கு என ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 வருடங்களாக பிரியா என்ற ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வந்தார். இவர் ஒருவருக்காக அரசு சார்பில் இரண்டு 'டிவி'க்கள், இரண்டு மின்விசிறிகள், மூன்று டேபிள்கள் ஆகியவற்றை கல்வித்துறை வழங்கி இருந்தது.மேலும் சன்னதி புதுக்குளம் பள்ளியில் இருந்து இந்த மாணவி ஒருவருக்காக தினசரி மதிய உணவு கொண்டு வரவும் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.



இந்தாண்டு 5ம் வகுப்பை முடித்த அந்த மாணவியும் வெளியேறி விட்டார். இதனால் பள்ளியில் மாணவ,மாணவியர் இன்றி இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.இதுபோல மானம்பாக்கி,கிளங்காட்டூர் உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ,மாணவியர் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் ஒரு மாணவிக்கு இரு ஆசிரியர்கள், இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் என்ற நிலை உள்ளது.



நேற்று செய்யாலுார் தொடக்க பள்ளியில் டி.சி., வாங்க வந்திருந்த மாணவிக்கு டி.சி., கொடுக்காமல் ஆசிரியர்கள் இருவரும் பள்ளியிலேயே அமர வைத்து இருந்தனர்.



உதவி தொடக்க கல்வி அலுவலர் பாஸ்கர் கூறுகையில், ''செய்யாலுார் பள்ளியில் படித்த மாணவி 5ம் வகுப்பு முடித்தால் வெளியேறி விட்டார். நாளை(ஜூன் 2) ஒரு மாணவியை சேர்ப்பதாக பெற்றோர் உறுதியளித்துள்ளனர்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement