Ad Code

Responsive Advertisement

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மீது குறைந்து வரும் ஆர்வம் - 12,000 இடங்களுக்கு 3,008 பேர் மட்டுமே விண்ணப்பம்

சமீப காலமாக இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்துகொண்டே வருகிறது. இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் உள்ள 12 ஆயிரம் இடங்களுக்கு வெறும் 3,008 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் என 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு 2 ஆண்டு கால இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு (தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு) வழங்கப்படுகிறது. இதில், பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம்.

இப்படிப்பை முடிப்பவர்களுக்கு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி கிடைக்கும். இடைநிலை ஆசிரியர்கள் முன்பு மாவட்ட அளவி லான பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலும், அதன்பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையிலும் தேர்வு செய்யப் பட்டு அரசுப் பள்ளிகளில் நியமிக்கப் பட்டனர்.

தற்போது நியமன முறை முற்றிலும் மாற்றப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடிப்பவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வில் பெற்ற மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது.

முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். இப்படிப்பை முடித்தாலே சற்று தாமதம் ஆனாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலம் அரசு வேலை கண்டிப்பாக கிடைத்து விடும் என்பதால் பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் இப்படிப்பில் ஆர்வத்துடன் சேர்ந்தனர். தகுதித் தேர்வு தேர்ச்சி அறிமுகப்படுத்தப் பட்ட பின்பு ஆர்வம் சற்று குறையத் தொடங்கியது.

ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அரசு வேலைக்காக ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டு காலமாக ஆசிரியர் தகுதித் தேர்வும் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக, இடைநிலை ஆசிரியர் நியமனமும் அரசுப் பள்ளிகளில் நடைபெறவில்லை. இதனால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவ, மாணவிகள் மத்தி யில் குறைந்து வருகிறது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கையைப் பொறுத்த வரையில், ஏறத்தாழ 12 ஆயிரம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் 12 ஆயிரம் இடங்களுக்கு வெறும் 3,002 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் உறுதி. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அல்லது அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடம் கிடைக்குமா என்பதில்தான் போட்டி இருக்கும்.

இதுகுறித்து மாநில கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது,

“இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் முற்றிலும் குறைந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 500 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் நிரம்பிவிடும்.

பல மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துவிடு கிறார்கள். அத்தகைய மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிப்பது இல்லை.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சியிலும் நல்ல மதிப்பெண் பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன” என்றார்.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேருவோர் பணியில் இருந்தவாறே பட்டப் படிப்பையும், பிஎட் படிப்பையும் முடிக்கலாம். அதன்பிறகு அவர் கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம். தொடர்ந்து முதுநிலை பட்டம் பெற்றால் முது நிலை பட்டதாரி ஆசிரியராகவும் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement