Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் பதற்றம்; பெற்றோர் அதிகாரிகள் வாக்குவாதம் மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் குளறுபடி

இந்த ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் அதிகாரிகள் பலத்த கெடுபிடிகளுடன் நடந்து கொண்டதால், தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் பதற்றம் அடைந்தனர்.இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகள், மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க  நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


தமிழகம், தவிர்த்து மற்ற மாநிலங்களில் உள்ள தேசிய அளவிலான மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீட்டுக்கு நடத்தப்படும் தகுதி நுழைவுத் தேர்வு இந்த ஆண்டும் நடத்துவதற்கு சிபிஎஸ்இ கடந்த மாதம் அறிவிப்பு ெவளியிட்டு இருந்தது. 


அதற்காக விண்ணப்பித்து  இருந்த மாணவர்களுக்கு மே 1ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு நீதிமன்ற உத்தரவு வந்ததால் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஜூலை மாதம் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ அறிவித்த நுழைவுத் தேர்வு எழுத நாடு முழுவதும் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். நேற்று காலை 10 மணிக்கு நுழைவுத் தேர்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் 39 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 


தேர்வு மையம் தேடுவதில் டைம் அவுட்: திடீரென தேர்வு எழுதியே ஆக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், பல மாணவர்கள் தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர். அப்படியும் மையத்தை கண்டுபிடித்து வந்தபோது, உள்ளே அனுமதிக்க முடியாது என்று கேட்டை பூட்டி விட்டனர். இதனால் மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர். எப்படியாவது உள்ளே விடுங்கள் என்று அவர்களின் பெற்றோரும் வலியுறுத்தினர். ஆனால் மாணவர்களை உள்ளே விட மறுத்தனர். இதனால் மாணவர்கள் மையத்தின் முன்பாக உட்கார்ந்து போராட்டம் நடத்தினர்.


 இன்னும் சில மாணவர்கள் அருகில் உள்ள மதில் சுவற்றில் ஏறி குதித்து உள்ளே சென்றனர். அப்படியும் சில மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கவில்லை. அவர்களை வெளியேற்றினர். இதனால் மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லையே என்று அழுதபடியே சென்றனர். பஸ் சர்வீஸ் கட்: பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்த மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட மையத்தை அடைய மிகவும் சிரமப்பட்டனர். ஆங்காங்கே ஓட்டு கேட்டு அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நத்தை வேகத்திலேயே இயக்கப்பட்டன. மேலும், ஞாயிற்றுக்கிழமை என்பதால் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்கு செல்ல முடியவில்லை. 


பாதியில் சுற்றுலா ரத்து: இது குறித்து மாணவி ஒருவர் கூறுகையில், மருத்துவத்துக்கு பொது நுழைவுத் தேர்வு இருக்காது என்பதால் என் குடும்பத்துடன் நாங்கள் சுற்றுலா சென்று இருந்தோம். ஆனால், திடீரென அதை கேன்சல் செய்துவிட்டு ஓடோடி வருகிறோம். எதுவுமே படிக்கவில்லை. எனினும் தேர்வை தவறவிடக் கூடாது என்பதற்காக வந்தேன். தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. மாணவர்களுக்கு மாநில அரசு எந்தவித தகவலையும் உருப்படியாக தெரிவிக்கவில்லை என்றார். 


ஆர்ப்பாட்டம்: தேர்வு மைய அதிகாரிகள் காட்டிய கெடுபிடிகளை அடுத்து கடுப்பான பெற்றோர், மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவ துறை அதிகாரிகளுக்கும் பெற்றோருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது பெற்றோர் முறையான எந்த அறிவிப்பும் மாநில அரசு தரப்பில் அல்லது மருத்துவ கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கவில்லை. உயிரை பணயம் வைத்து மாணவிகளை இரவில் பஸ்சிலும், ரெயிலிலும் அழைத்து வந்திருக்கிறோம். இங்கே தேர்வு எழுத அனுமதி மறுக்கின்றனர் என்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். 


தேர்வுக்கு பிறகு மாணவ மாணவியர் கூறியதாவது: நுழைவுத் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது. மாநில பாடத்திட்டத்தின்படி இல்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருந்ததால் பதில் எழுதுவது கடினமாக இருந்தது. குறிப்பாக இயற்பியல் பாடத்தில் நிறைய சமன்பாடுகள் கேட்கப்பட்டதால் மிகவும் கடினமாக இருந்தது. தேர்வு இன்று நடக்கும் என்று 2 நாட்களுக்கு முன்புதான் தெரியும். 


அதனால், அவசரமாக கிளம்பி வந்தோம். எந்த தேர்வு மையம் எங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே கடினமாக இருந்தது. மீண்டும், ஜூலை மாதம் தேர்வு நடக்கும் என்கிறார்கள். திரும்பவும் எழுத வேண்டுமா என்பது என்பது குறித்து குழப்பமாக இருக்கிறது.  இவ்வாறு மாணவ மாணவியர் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. சென்னையில் சமூக சமத்துவத்துக்கான  மருத்துவ சங்கத்தின் சார்பில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement