Ad Code

Responsive Advertisement

மருத்துவ உபகரணங்களால் என்ன பக்க விளைவுகள்?

மருத்துவ உபகரணங்களால், ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்க, 'மெட்டீரியோ விஜிலன்ஸ்' எனும் கமிட்டியை துவங்க, மத்திய அரசின் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

இந்திய பார்மா கவுன்சில் சார்பில், அனைத்து அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், கடந்தாண்டு ஜூலையில் 'பார்மா - கோ' கண்காணிப்பு மையம் மற்றும் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இம்மையத்துக்கு, மருந்துகள் குறித்த புகார்கள் வந்தன.


இதையடுத்து, மையத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க, இதற்கான பிரத்யேக 'மொபைல் ஆப்', பிரத்யேக இலவச எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


இந்நிலையில், மருத்துவ கருவிகளால், ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த புகார்களை தெரிவிக்க, 'மெட்டீரியோ விஜிலன்ஸ்' எனும் கமிட்டியை துவங்க, மத்திய அரசின் சுகாதார துறை, அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.


கோவை அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோ கூறியதாவது:



மருத்துவ உபகரணங்களால், பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக தொற்றுநோய்கள் அதிகளவு பரவுகின்றன. இதை தடுக்கவே, மத்திய அரசு இதற்கான கமிட்டியை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.



சிரின்ஜ், ஊசி, எச்.ஐ.வி., பரிசோதிக்கும் கருவி, இருதய ஸ்டென்ட், கண்களில் பொருத்தப்படும் லென்ஸ், எலும்புகளை ஒட்ட வைக்கும் சிமென்ட், குழந்தைகளுக்கான ஸ்கால்ப் வெயின்செட் உள்ளிட்ட, 14 வகையான மருத்துவ கருவிகளின் மீதான புகார்கள் குறித்து பதிவு செய்ய, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



இத்தகைய மருத்துவ உபகரணங்களை டாக்டர்கள், நர்ஸ்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதால், புகார்களை அவர்களிடம் இருந்து பெற உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் மெட்டீரியோ விஜிலன்ஸ் கமிட்டி, விரைவில் உருவாக்கப்படும்.


கமிட்டியில், துணை கண்காணிப்பாளர், இருப்பிட மருத்துவ அலுவலர், பயோமெடிக்கல் துறையினர், நர்சிங் கண்காணிப்பாளர் உறுப்பினர்களாக இருப்பர். தற்போது நாடு முழுவதும் புகார்களை பெற திருவனந்தபுரம், காசியாபாத், டில்லி ஆகிய இடங்களில், மூன்று மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான தனி படிவமும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement