Ad Code

Responsive Advertisement

கலை - அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம்: முதல் நாளில் 25 சதவீதம் கூடுதல் விண்ணப்பங்கள் விற்பனை.

கடந்த ஆண்டுகளைப் போலவே கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவ, மாணவிகளிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே கூட்டம் அலைமோதியது. முதல் நாளில் கடந்த ஆண்டுகளை விட 25 சதவீதம் கூடுதலாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வேலைவாய்ப்புகள் குறைந்தது, மென்பொருள் நிறுவனங்களின் ஊதியக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக 2011-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து, கலை - அறிவியல் படிப்புகள் பக்கம் திரும்பியது. 2015-16ஆம் கல்வியாண்டு வரை இதேநிலைதான் நீடித்து வந்தது. அதுபோல, நிகழாண்டும் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. 


இம் மாதம் 20-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். இருப்பினும், முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.குறிப்பாக, சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத், மாநிலக் கல்லூரி ஆகிய அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை வாங்க கூட்டம் அலைமோதியது. அதுபோல எழும்பூர் எத்திராஜ் கல்லூரி, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி போன்ற தனியார் கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.



25 சதவீதம் கூடுதல் விற்பனை:

விண்ணப்ப விநியோகம் குறித்து சென்னை காயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கே.சீதாலட்சுமி கூறியது: விண்ணப்ப விநியோகம்தொடங்கிய முதல் நாளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.முதல் நாளான திங்கள்கிழமை 2,696 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 600 கூடுதலாகும் என்றார்.


இதுகுறித்து ராணி மேரிக் கல்லூரி முதல்வர் அக்தர் பேகம் கூறியதாவது:- 


முதல் நாளில் 1,300 விணணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் கூடுதல் என்றார்.அதுபோல சென்னை மாநிலக் கல்லூரியில் 650 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் மிக அதிகம் என அந்தக் கல்லூரியின் முதல்வர் பிரேமானந்த பெருமாள் கூறினார்.பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, விண்ணப்ப விநியோகம் மேலும் அதிகரிக்கும் எனவும் கல்லூரி நிர்வாகிகள் கூறினர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement