Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற கல்விக் கோரிக்கைகள் விளக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் களத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கான கல்விக் கோரிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டம் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான வே. வசந்திதேவி பேசியதாவது : 


நடுத்தர வர்க்க மக்களின் குழந்தைகளும், வசதி படைத்தவர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படிக்கும் நிலை ஏற்பட வேண்டும். வசதி படைத்த குடும்பத்து குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கும்போது, அந்த பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர் பணியும் மேம்படும்.இன்றைக்கு இருக்கும் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் 80 சதவீத தனியார் பள்ளிகளை மூடவேண்டிய நிலை ஏற்படும். 


தகுதியான ஆசிரியர்கள் இல்லாதது, கட்டமைப்பு வசதிகள் குறைபாடு போன்ற காரணங்களால் தற்போது 700-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுவதற்கு தகுதியற்றதாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை மூடிவிட்டு அங்கு படிக்கும் குழந்தைகளை வேறு அரசுப் பள்ளியிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலோ சேர்க்க வேண்டும்.இலவச கல்விஅனைவருக்கும் இலவசமாக அரசே கல்வி வழங்க முடியுமா என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். 1980-ம் ஆண்டு வரை அனைவரும் பொதுப் பள்ளியில் கட்டணமில்லா கல்வியைத்தான் பெற்றார்கள். உலகில் உள்ள பல நாடுகளிலும் கட்டணம் இல்லாமல்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.


எனவே அனைவருக்கும் கட்டணமில்லாமல் கல்வி வழங்க அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும் என்றார் அவர்.கல்விக் கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ள கல்வி தொடர்பான கோரிக்கைகள் வருமாறு: 


கல்வியில் வணிகமயத்தை ஒழிக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுஇல்லாத கல்வி வழங்க பொதுப்பள்ளி முறையை உருவாக்க வேண்டும். மனப்பாடம் செய்யும் வகையிலான கல்விக்குப் பதிலாக, பிற மாநிலங்களில் உள்ளதுபோல் 11, 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். முழுமையாக தாய்மொழி வழிக்கல்வியை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்தியுள்ள வசதிகளை நிறைவேற்றாத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.



இந்த கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் ஏற்று தேர்தல் அறிக்கையில் வெளியிடவேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பேராசிரியர் கே.ஏ.மணிக்குமார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர்கள் எஸ்.முருகேசன், எம். மணிமேகலை, வான்முகில் அமைப்பின் இயக்குநர் பிரிட்டோ, மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செ.மரிய சூசை மற்றும் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement