Ad Code

Responsive Advertisement

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்.எஸ்.ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வு மற்றும் பள்ளிகள் பார்வை ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.


உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அறிவியல் மற்றும் நர்சரி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்எஸ்ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



ஆய்வு குறித்த தகவல் ரகசியமாக இருக்க வேண்டும். தொடர்ந்து புகார்கள் வரும் பள்ளிகள் மற்றும் கல்வித் தரத்தில் பின்தங்கிய பள்ளிகளைத் தேர்வு செய்து திடீர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.


குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும் போது, ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை தருவது குறித்தும், வேலை நேரம் முழுவதும் பள்ளியில் இருப்பது குறித்தும் முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.


மேலும், மாணவர்களின் முன்னேற்றம், பள்ளி நூலகம் பயன்பாடு, நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள விவரம், கழிப்பறை வசதி, துப்புரவு பணியாளர்கள் பணி செய்வது குறித்த விவரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளதா என்பன போன்ற விவரங்களை ஆய்வு செய்து அது தொடர்பான விவரத்தை தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement