Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'அ, ஆ' தெரியவில்லை அரசு பள்ளிகளில் நடந்த ஆய்வில் அதிகாரிகள் அதிர்ச்சி

அரசு பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'அ, ஆ' போன்ற தமிழ் எழுத்துக்களே தெரியாதது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில், மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது.

இதன்கீழ்,ஐந்து வயது முதல், 14 வரையிலான மாணவ, மாணவியருக்கு கட்டாய இலவசகல்வி அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால், கல்வியின் தரம் குறைந்து விட்டதாக, மத்திய அரசுதெரிவித்துள்ளது.அதனால், சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வரவும், 'ஆல் பாஸ்' என்ற முழுமையான தேர்ச்சி முறையை ரத்து செய்யவும், மாநிலங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில்,கல்வித்துறை அதிகாரிகள் கற்றல், கற்பித்தல் ஆய்வில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சில ஆசிரியர்கள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சி காட்ட வேண்டும் என, அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் கட்டாயப்படுத்துகின்றனர். குறைந்தது, 85 சதவீத தேர்ச்சியாவது இல்லாவிட்டால், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மற்றும் பணி மாறுதல் இருக்கும் என, அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அதேநேரத்தில், அனைத்து மாணவர்களையும், 9ம் வகுப்பு வரை, 'ஆல்பாஸ்' செய்கின்றனர். அதனால், 10ம் வகுப்பு ஆசிரியர்கள் மாட்டிக் கொள்கிறோம். 


பல மாணவர்களுக்கு தமிழில் எழுத்துக் கூட்டி படிக்கவே தெரியவில்லை. வேறு வழியில்லாமல், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில், மாணவர்களுக்கு உயிரெழுத்துகளை சொல்லித்தர வேண்டியுள்ளது. சிறப்பு வகுப்பு நடத்தினால் அவர்கள் வருவதில்லை.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், 'மாணவர்களை சுதந்திரமாக விடுங்கள், பொதுத் தேர்வில் அவர்கள், 'எப்படியாவது' தேர்ச்சி பெறுவர்' என்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மாணவர்களை, 8ம் வகுப்பு வரை, 'பெயில்' செய்வதில்லை. பின் தங்கிய மாணவர்களை தேர்ச்சி தராமல் நிறுத்தி வைத்தால், கட்டாய கல்வி சட்டப்படி எங்களுக்கு பிரச்னையாகி விடுகிறது. எனவே, மாணவர்களும், பெற்றோரும் தான், இந்த பிரச்னையை தீர்த்து கொள்ள வேண்டும்' என்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement