Ad Code

Responsive Advertisement

அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு

அண்மையில் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க.சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கச் செல்லும் வழியில் சென்னை குரோம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆய்வு செய்தார். 

மழைக்குப் பின்னர் வரும் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளபடி, பள்ளி வளாகம், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று அமைச்சர் பழனியப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளைப் பார்வையிட்ட அவர், பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.பி.காந்திமதியிடம் பள்ளி குடிநீர் தொட்டி, கழிப்பறைகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார். 

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை இழந்த மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கேட்டறிந்தார்.  

இதைத் தொடர்ந்து 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து வரும் அனைத்து மாணவிகளுக்கும் தேவையான நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டது. அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்று அமைச்சரிடம் தலைமையாசிரியை பதில் அளித்தார். 

மாணவிகளுக்குக் காய்ச்சிய குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். பின்னர் பள்ளி வளாகத்துக்குள் நபார்டு உதவியுடன் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி வகுப்பறைகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.  

இதைத் தொடர்ந்து திருநீர்மலை பேரூராட்சி, அனகாபுத்தூர் நகராட்சிப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்களை வீடுவீடாகச் சென்று வழங்கினார் அமைச்சர். 

பல்லாவரம் எம்.எல்.ஏ. பி.தன்சிங், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சி.பெருமாள், கிருஷ்ணகிரி முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தராஜ், அனகாபுத்தூர் நகர்மன்றத் தலைவர் அனகை வேலாயுதம், வார்டு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement