Ad Code

Responsive Advertisement

'ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை' - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்

''ரஷ்யாவில் படித்த டாக்டர்களுக்கான, தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம் வலியுறுத்தினார். அகில இந்திய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்கம், ரஷ்ய கலாசார மையம் மற்றும் இந்திய வாழ் ரஷ்ய மருத்துவ பட்டதாரிகள் சங்கம் இணைந்து, மருத்துவ படிப்பு அங்கீகார மாநாட்டை சென்னையில் நடத்தின.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான கற்பக விநாயகம் பேசுகையில், ''ஏழை, பணக்காரர் என, அனைவரும் மருத்துவம் பெற, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அதற்கு அதிக மருத்துவர்கள் வேண்டும். எனவே, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில், தகுதியான பல்கலைகளில் படித்த டாக்டர்களை, தகுதித் தேர்வின்றி இந்தியாவில் அங்கீகரிக்க வேண்டும்,'' என்றார்.

தேசிய யுனானி கல்வி மைய முன்னாள் இயக்குனர் சையது கலிபுல்லா பேசுகையில், ''அலோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளை இணைக்க வேண்டும். ரஷ்ய பல்கலைகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, மாணவர்கள் படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், படித்து முடித்த அவர்களை பணியாற்ற அனுமதி மறுப்பது கேலிக்குரியது. ரஷ்ய அரசு இந்த விஷயத்தில், இந்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும்,'' என்றார்.

ரஷ்ய கூட்டமைப்பு துாதர் செர்ஜி எல் கோடோவ் பேசுகையில், ''இந்தியாவை விட அதிக தொழில்நுட்பத்துடன் மருத்துவம் கற்றுத் தருகிறோம். எங்கள் டாக்டர்கள் உலக அளவில் முன்னணியில் உள்ளனர்,'' என்றார்.மாநாட்டில், அகில இந்திய வெளிநாடு மருத்துவ பட்டதாரிகள் சங்க காப்பாளர் டாக்டர் அமீர் ஜஹான், ரஷ்ய மருத்துவ பட்டதாரிகள் சங்க தலைவர் நசீருல் அமீன், காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ், அண்ணா பல்கலை சர்வதேச துறை இயக்குனர் ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement