Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் பருவமழை தொடக்கம் : மழைக்கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

வடகிழக்கு பருவமழை காரணமாக சீதாஷ்ண நிலை திடீர் திடீரென மாறி வருகிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், குழந்தைகள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சாலைகளில் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவு நீர் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைக்காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மழைகால நோய்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்புமுறை குறித்து டாக்டர் ஆனந்த் கூறியதாவது: மழைகாலங்களில் கொசுக்களினால் அதிகளவில் நோய்கள் பரவும். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களின் மக்கள் நெருக்கத்தினாலும், காற்று தாராளமாக செல்ல முடியாத அடுக்கான வீடுகள், கட்டிடங்கள், வீட்டை சுற்றி சாக்கடை, தண்ணீர் தேங்குவதாலும் கொசு, ஈக்கள் போன்றவை அதிகளவில் உற்பத்தியாகும். இதனால் நோய்கள் அதிகளவு பரவ வாய்ப்புள்ளது.

இதனால், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, எலிக்காய்ச்சல் மற்றும் காலரா, வாந்திபேதி, சீதபேதி, டைபாய்ட் போன்ற காய்ச்சல்களும் நோய்களும் ஏற்படும். மேலும், இதுபோன்ற காலங்களில் காய்ச்சல், சளி, தும்மல், இருமல், அலர்ஜி வருவது இயற்கைதான். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இதன் தாக்கம் அதிகரிக்கும். அந்த நேரங்களில் உணவு பழக்க வழக்கங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. அசைவ உணவுகளை தவிர்பது நலம்.

இத்தகைய காலகட்டத்தில் தண்ணீரை நன்கு காய்ச்சித்தான் குடிக்க வேண்டும். அதேபோல, சுத்தமான சூடான உணவுகளை எடுத்து கொள்ளலாம். ரயில், பஸ்களில் பயணம் செய்பவர்கள் பாதுகாப்புடனும், தேவையான மருந்துகளை உடன் எடுத்துச் செல்வது நல்லது. காய்ச்சலோ, சளியின் தாக்கமோ இருந்தால், ஆரம்ப கட்டத்திலேயே அருகில் உள்ள மருத்துவரை அணுகி தங்களை முழுமையாக பரிசோதித்து கொள்வதுடன் தேவையான சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு டாக்டர் ஆனந்த் கூறினார்.

நீங்களே டாக்டராக வேண்டாம்!
சாதாரண காய்ச்சல், சளி தொல்லைதானே என்று முடிவு செய்து நீங்களே உங்களுக்கு தெரிந்த மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம். இது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. எனவே, உங்களுக்கு தெரிந்த, அல்லது அருகில் உள்ள மருத்துவரை சந்தித்து அவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ளவும்.

சுத்தமான குடிநீர்

பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக குடிநீரே இருந்து வருகிறது. எனவே, அசுத்தமான தண்ணீரை குடிப்பதினால் காலரா, மலேரியா காய்ச்சல், டைப்பாய்டு மற்றும் தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய்கள் இக்காலத்தில் மனித உடலை எளிதாக தாக்கும். சுகாதாரம் இல்லாத கடைகளில் தண்ணீர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், ஜூஸ் போன்றவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிப்பது அதிக நலத்தை தரும்.
தனியாக போவதை தவிர்க்க வேண்டும்

சர்க்கரை வியாதி உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், வயதானவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோர் அதிகாலை மற்றும் இரவு நேர மழை மற்றும் பனிபொழியும் நேரங்களில் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருப்பது நலம். அப்படி வெளியே செல்ல வேண்டியிருந்தால், துணைக்கு யாரையாவது கூட்டி செல்லுங்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement