Ad Code

Responsive Advertisement

91 அரசு விற்பனை அங்காடிகளில் இன்று முதல் ஒரு கிலோ துவரம் பருப்பு 110

துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்தும் வகையில், முதல்வர் அறிவித்தபடி, 91 அரசு விற்பனை அங்காடிகள் மூலம் இன்று முதல் துவரம் பருப்பு கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் துவரம் பருப்பு விலை திடீரென விலை கிடுகிடுவென உயர்ந்தது. கிலோ ரூ.210 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து 5000 மெட்ரிக் டன் இறக்குமதி செய்தது. இதில் தமிழக அரசுக்கு 500 மெட்ரிக் டன் வழங்கப்பட்டது.

இவ்வாறு பெறப்பட்ட துவரை, அரவை ஆலைகள் மூலம் துவரம் பருப்பாக மாற்றப்பட்டு, கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் அரசு பல்பொருள் விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும், துவரம் பருப்பு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, 1/2 கிலோ 55 ரூபாய், 1 கிலோ 110 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 

சென்னையில் டியுசிஎஸ், வடசென்னை, சிந்தாமணி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 36 கூட்டுறவு பண்டக சாலைகள், 20 அமுதம் விற்பனை அங்காடிகள் என மொத்தம் 56 விற்பனை நிலையங்கள், மதுரையில் 11 கூட்டுறவு பண்டக சாலை, திருச்சியில் 14 பண்டக சாலைகள், கோயம்புத்தூரில் 10 விற்பனை அங்காடிகள் என 91 விற்பனை அங்காடிகள் மூலம் நவம்பர் 1ம் தேதி முதல் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும், வழக்கம்போல் அரசு விற்பனை அங்காடிகள் திறக்கப்பட்டு ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.110க்கு விற்கப்படும் என்றும், ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement