Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் மகிழ்ச்சி, பெற்றோர்கள் கவலை சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 17வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக 17வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 7ம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பேய்மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து சென்னை, காஞ்சிப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட மாவட்டங்களில் கடைசியாக கடந்த 6ம் தேதி தான் பள்ளி, கல்லூரிகள் இயங்கியது. அதன் பிறகு தொடர்ச்சியாக வாரவிடுமுறை உள்பட 16 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. 

கடந்த சில தினங்களாக மழை ஒரளவுக்கு குறைந்திருந்தாலும், பெரும்பாலான பள்ளிகள் தண்ணீரில் மூழ்கியதாலும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டிருந்ததாலும் 22ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மூன்று மாவட்ட கலெக்டர்கள் அறிவித்தனர். இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக இன்னும் சில வாரங்களில் அரையாண்டு தேர்வு வரவுள்ளதால் பாடத்தை முடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கலெக்டர்கள் அறிவித்தபடி இன்று வழக்கம்போல் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்றும் பெரும்பாலான இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்ததால் காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இதனால் தொடர்ச்சியாக 17 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் பெற்றோர்கள் கவலையில் உள்ளனர். புறநகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. மேலும் பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் இதுவரை வடியாததால் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வீடு திரும்பாமல் உள்ளனர். இதுவும் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது.

சென்னை புறநகரில் பெரும்பாலான பள்ளிகளில் மழையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாங்காடு, பரணிபுத்தூர், ஐயப்பன் தாங்கல், குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம ஊராட்சி பள்ளிகளிலும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தேங்கிய மழைநீர் முற்றிலுமாக இன்னமும் வடியாத நிலையில் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்தாததால் 90 சதவிகித அரசு பள்ளிகள் முழு அளவில் சீர் செய்யப்படாமல் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement