தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலர் டி.சபிதா கூறினார்.
குழந்தைகள் தின விழா, டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
விழாவில் தலைமை வகித்து, டி.சபிதா பேசியது:
பள்ளி மாணவர்களுக்கான 14 வகையான நலத்திட்டங்களுக்காக தமிழக அரசு இதுவரை ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
தரமான கல்வியை வழங்க எத்தகைய கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதை அறிந்து அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், சுற்றுச்சுவர்கள், கழிப்பறைகள் என உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டும் ரூ.3 ஆயிரம் கோடியை தமிழக அரசு வழங்கியது. இதனால், நல்ல உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களையும் பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்காக போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளுக்கு வராமல் இருந்த 57 ஆயிரம் மாணவர்களில் 48 ஆயிரம் பேர் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.
மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2010-11-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 344 உயர்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்ட ரூ.380 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தப் பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தின்படி, தரம் உயர்த்தப்பட்ட மேலும் 810 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்காக மொத்தம் ரூ.1,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்- மாணவர் விகிதம் 1:22 என்ற அளவுக்கு உள்ளது என்றார் அவர்.
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி: பாடப் புத்தகங்களை படிப்பதோடு நின்றுவிடக் கூடாது. நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளைக் கொண்டாடும் அதேவேளையில், நம்முள் உள்ள குழந்தைத் தன்மையையும் கொண்டாட வேண்டும் என்றார்.
தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோரும் பேசினர்.
 
 
 
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை