Ad Code

Responsive Advertisement

கடலூர் மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை; மாணவர்களைக் கண்காணிக்க குழு

கல்வியில் பின்தங்கியுள்ள கடலுார் மாவட்டத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் ஜாதிய மோதல் தலை துாக்கியுள்ளது. இதனைத் தவிர்த்திட மாவட்ட நிர்வாகம், போலீஸ் மற்றும் பள்ளி கல்வித் துறை இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களிடையே ஏற்படும் சிறு, சிறு பிரச்னைகளை ஆரம்பத்திலேயே களைந்திட வசதியாக அனைத்து பள்ளிகளிலும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க கடலூர் முதன்மைக் கல்வி அதிகாரி பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்டத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவர்களிடையே அமைதியின்மையும், ஓழுங்கீனமான செயல்களும் அதிகரித்து காணப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை தீவிரமாக கண்காணித்து அதற்குரிய பரிகாரங்கள் காண வேண்டியது.

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கடமையாகும். மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளைத் துவக்கத்திலேயே கண்டறிந்து, அதனைக் களைந்து மாணவர்களை நல்வழிப்படுத்தவில்லை என்றால், அதுவே சமூகத்தில் மிகப்பெரிய சம்பவங்கள் ஏற்பட காரணமாகி விடும்.

மாணவர்களின் கற்றல் திறன் குறைதல் குறித்தும், நடத்தை மாறுபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர்களை நல்வழிப்படுத்த தனியாக கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும்.மாணவர்களுக்குள் சிறு பிரச்னை ஏற்பட்டால் உடன், சம்மந்தப்பட்ட மாணவரை விசாரணை செய்து, அவரது பெற்றோரை அழைத்து திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று அனைத்து பள்ளிகளிலும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கண்டிப்பாக செயல்பட வேண்டும். இக்குழுவில் தலைமை ஆசிரியர் தலைவராகவும், உதவி தலைமை ஆசிரியர் செயலராகவும், அனைத்து ஆசிரியர்களும் உறுப்பினர்களாக செயல்பட வேண்டும். மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளில் குறைந்தது இருவர் இக்குழுவில் உறுப்பினராக இடம் பெற வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒவ்வொரு மாதமும் இருமுறை மற்றும் தேவையின் அடிப்படையில் மாலை 4:30 மணிக்குப் பிறகு கூட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகளை விவாதித்து தீர்வு காண வேண்டும். இதற்கென பதிவேடுகள் உருவாக்கி நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும்.

மாணவர்கள் தாமதமாக பள்ளி வருகை, தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருப்பது மற்றும் ஏதேனும் ஒழுங்கீன செயலில் மாணவர் ஈடுபட்டால் அதனை இப்பதிவேட்டில் பதிவு செய்து, அந்த செயலின் தன்மைக்கேற்ப மாணவரின் நடத்தை மாற்றத்தை சரி செய்யும் வகையில் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். அதனை வாரம்தோறும் திறந்து, ஏதேனும் புகார் இருந்தால் அதன் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விவாதித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்தும், தமிழ்நாடு கல்வி விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகள் அனைத்திற்கும் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement