Ad Code

Responsive Advertisement

குறைந்த செலவில் வீடுதோறும் இணைய இணைப்புகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

குறைந்த செலவில், கிராமப்புறங்களில் வீடுதோறும் இணைய இணைப்புகள் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த இணையச் சேவையுடன் புதிதாக இணைய வழி தொலைக்காட்சி சேவைகளும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை (Optical Fibre) மூலமாக இணைத்து அரசின் சேவைகளை இணையம் மூலமாக பொதுமக்கள் பெற்றுப் பயனடையும் வகையில் "பாரத்நெட்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் தமிழகத்தில் மாநில அரசின் மூலமாகத்தான் செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், இந்தத் திட்டத்தை தமிழகத்தில் மாநில அரசே செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகளும் கண்ணாடி இழை வடத்தின் மூலம் இணைக்கப்படும். தமிழக அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாகப் பெற்று பயனடையும் வகையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்.

இந்தத் திட்டத்தை ரூ. 3,000 கோடியில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை பதிக்கும் கழகம் (Tamilnadu FibreNet Corporation) என்ற ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படும்.

இணையதளச் சேவை: தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மூலமாக அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், இதர இணையச் சேவைகள் அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அகண்ட அலைவரிசை சேவைகள், இதர இணையச் சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்கான உரிமத்தை தமிழக அரசு பெற்றுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனமானது, தமிழ்நாடு முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், இதர இணையச் சேவைகளை வழங்குவதற்காக, இந்திய ரெயில்டெல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

முதல்கட்டமாக, சுமார் 552 உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மூலமாக இணையச் சேவைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. "பாரத்நெட்' மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளதால், தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், ஏற்கெனவே பெற்றுள்ள உரிமத்தைப் பயன்படுத்தும்.

"இல்லந்தோறும் இணையம்' என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய (இன்டர்நெட்) இணைப்புகள் வழங்கப்படும். மேலும், அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், இதர இணையதளச் சேவைகள் ஆகியவற்றுடன் சேர்த்து புதிதாக இணைய வழி தொலைக்காட்சி சேவைகளும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இ-சேவை மையங்கள் மூலம் மேலும் 300 அரசு சேவைகள்

அரசின் இணையச் சேவை மையங்கள் மூலம், புதிதாக மேலும் 300 சேவைகள் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் இணையச் சேவை மையங்கள் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கிராமப்புற ஏழ்மை குறைப்புக் குழு, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் மூலமாக 10,034 இணையச் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சான்றுகள், ஓய்வூதியம், சமூகநலத் துறையின் சேவைகளான திருமண நிதியுதவித் திட்டம், கல்வி உதவி உள்ளிட்ட 36 சேவைகள் தற்போது வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் 70 லட்சம் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். 

நிகழ் நிதியாண்டில் இணையச் சேவை மையங்கள் மூலம் இப்போது அரசுத் துறைகளால் வழங்கப்பட்டு வரும் சேவைகளுடன், கூடுதலாக மேலும் 300 சேவைகள் வழங்கப்படும். இந்த மையங்கள் மூலமாக கூடுதல் சேவைகளை வழங்கிட அரசுக்கு ரூ. 10 கோடி செலவு ஏற்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement