Ad Code

Responsive Advertisement

கண்ணுக்கு கண்ணாக... இன்று தேசிய கண் தான தினம்...

ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண். சில காரணங்களால் (பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சக்கணக்கானோர் பார்வையின்றி தவிக்கின்றனர். கண்தானம் செய்வதன் மூலம் அவர்களும் பார்வை பெற முடியும். நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை தானமளிப்பதன் மூலம் பார்வையற்றவர்களின் கண்ணுக்கு கண்ணாக இருந்து ஒளி ஏற்றலாம். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., 8ம் தேதி தேசிய கண் தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் 'கார்னியா' குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 சதவீதம் பேர் குழந்தைகள். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 1 கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பார்வை இழப்பில் 75 சதவீதம் தடுக்கக் கூடியது. நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். இவர்களில் கண்தானம் செய்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. இதற்கு முக்கிய காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.

கார்னியா குறைபாடு: கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது. விழித்திரையில் பிம்பம் படியாததால், பார்வை தெரிவதில்லை. தொற்று நோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ, பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

யார் தரலாம் : அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டிபி, ரத்தக்கொதிப்பு போன்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம். தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறி நாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருந்தால் மட்டுமே கண் தானம் செய்ய முடியாது. கண்தானம் செய்ய விரும்புவோர், அருகிலுள்ள கண்தான வங்கி, அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement