Ad Code

Responsive Advertisement

லக்னோ சம்பவம் : ''இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்''!

க்னோவை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் என்ற முதியவர், அங்குள்ள தலைமை தபால் நிலையம் அருகே தட்டச்சு எந்திரத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
கடந்த 35 ஆண்டுகளாக இதே பகுதியில், தெருவோரத்தில் கிருஷ்ணகுமார் ஹிந்தி டைப் செய்து கொடுத்து தினமும் 100 ரூபாய் சம்பாதித்து வந்தார். தினமும் 10 மணி நேரம் உழைப்பில் அவரால் இவ்வளவு வருவாய்தான் ஈட்ட முடிந்தது. இவரது மகன் திருமணமாகியும் வேலை இல்லாமல் இருப்பதால் கிருஷ்ணகுமார் வருமானத்தை நம்பித்தான் குடும்பம் இருந்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அந்த பகுதிக்கு வந்த பிரதீப்குமார் என்ற சப்- இன்ஸ்பெக்டர்,  முதியவர் கிருஷ்ணகுமாரை அந்த இடத்தை விட்டு போகுமாறு கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கிருஷ்ணகுமார், அந்த இடம்தான் தனது குடும்பத்திற்கு சோறு போடுவதாகவும், எனவே தன்னை வேறு இடத்துக்கு போக கூற வேண்டாமென்றும் மன்றாடியுள்ளார்.
அவரது வேண்டுகோளுக்கு செவி சாய்க்காத அந்த சப்- இன்ஸ்பெக்டர், கிருஷ்ணகுமாரின் தட்டச்சு எந்திரத்தை காலால் உதைத்து உடைத்துள்ளார். முதியவர் கிருஷ்ணகுமார், கையெடுத்து கும்பிட்டும் அந்த சப்-இன்ஸ்பெக்டர் கேட்கவில்லை. கிருஷ்ணகுமாரின் தட்டச்சு எந்திரத்தை துண்டு துண்டாக உடைத்து விட்டு போய் விட்டார். 


லக்னோ நகரின் முக்கிய பகுதியில், நடந்த இந்த சம்பவத்தை அசுதோஷ் திரிபாதி என்ற புகைப்பட கலைஞர் போட்டோ  எடுத்துள்ளார். அந்த செய்தியை முதலில் 'தைனிக் பாஸ்கர்' ஹிந்தி பத்திரிகையில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.  அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டது. 

இந்த சம்பவம் நடந்து அடுத்த நிமிடம்  முதியவரின் தட்டச்சு எந்திரத்தை சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் குமார் உடைப்பது போன்ற புகைப்படங்கள் இணையங்களில் பரவியது. இந்த சம்பவம், லக்னோ நகர மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த சப் - இன்ஸ்பெக்டருக்கு எதிராக கடும் கண்டனம் குவிந்தது. உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவும் இந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 


தொடர்ந்து முதியவரின் தட்டச்சு எந்திரத்தை உடைத்த சப் - இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையே முதல்வர் அகிலேஷ் யாதவின் உத்தரவின் பேரில், முதியவர் கிருஷ்ணகுமாரை லக்னோ ஆட்சியர் ராஜசேகர், காவல்துறை உயரதிகாரி ராஜேஷ் பாண்டே ஆகியோர் அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தனர். 



அதோடு முதியவர் கிருஷ்ணகுமாருக்கு  ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இரண்டு டைப்ரைட்டர் எந்திரங்களை வழங்கினார். இதில் ஹிந்தி தட்டச்சு எந்திரத்தை பெற்றுக்கொண்டு, ஆங்கில தட்டச்சு எந்திரத்தை கிருஷ்ணகுமார் திரும்ப  கொடுத்து விட்டார். 



இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில்,''  அந்த சப் -இன்ஸ்பெக்டர் எனது மகன் வயதில்தான் உள்ளார். அதனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்''  என வலியுறுத்தப் போவதாக கூறியுள்ளார். 



தற்போது கிருஷ்ணகுமாரின் ஏழ்மை நிலையை அறிந்த உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், அவருக்கு  ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். முதியவர் கிருஷ்ணகுமாருக்கு சில போலீஸ்காரர்கள் தொலைபேசி  மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து  பத்திரிகையாளர்கள் காவல் கண்காணிப்பாளர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement