Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களுக்கு மனப்பிரச்னைகள் - உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்க கோரிக்கை

ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்க்கை முறையில் உள்ள ஏற்றத்தாழ்வு, கல்வியில் பின்தங்கி இருப்பது, குடும்ப சூழலால் பாதிக்கப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளை, விரோதமாகவும், வன்முறை செயல்களாகவும் வெளிப்படுத்துகின்றனர். 

இத்தகைய செயல்களை கட்டுப்படுத்தவே, பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களுக்கும் இதே நிலை இருப்பதாக, தற்போது நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

பணிச்சுமை
திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் துவக்கம் முதல் மேல்நிலை வரை, பத்தாயிரத்துக்கும் அதிகமாக ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் காலிப்பணியிடம் இருப்பதால், அவர்களுக்கான பணிகளையும் மற்ற ஆசிரியர்கள் செய்ய வேண்டியுள்ளது. இதனால், பணிச்சுமைக்கு மட்டுமின்றி மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

தவிர, மாணவர்களைப் போன்று குடும்பச் சூழல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் மனதளவில் பாதிக்கப்படும் நிலைகளும் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளி நிர்வாகத்தில் பிரச்னை எழுப்புவது மற்றும் மாணவர்களிடம் வெறுப்பை காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது பெரும்பான்மையான பள்ளிகளில், மாணவர்களிடையே நடக்கும் பிரச்னைகளை விடவும், ஆசிரியர்- தலைமையாசிரியர், ஆசிரியர்- நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்- உடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கிடையேயான பிரச்னைகளே அதிகரித்துள்ளன. இதற்கு, முதன்மையான காரணம், ஆசிரியர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதே. அரசுப்பள்ளிகளில், குறிப்பாக துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்த பிரச்னைகள் தீர்வுகாணப்படாத பிரச்னையாக தொடர்ந்து நடக்கிறது.

உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளிலும் இத்தகைய பிரச்னைகள் இருப்பினும், அவை வெளிப்படையாக தெரிவதில்லை.

பள்ளி மாணவர் அல்லது ஆசிரியரோ, இதனால் பெரிதளவில் பாதிக்கப்படும்போது மட்டுமே, இவை கண்டுகொள்ளப்படுகின்றன. அந்த சூழலிலும் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனரே தவிர, தீர்வுக்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.

திருப்பூர் மாவட்டத்தில், சமீபத்தில் உடுமலை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கடையே பிரச்னை தீவிரமாக நடந்துள்ளது. இம்மாவட்டம் மட்டுமின்றி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இப்பிரச்னை தொடர்ந்து நடக்கிறது.

இத்தகைய பிரச்னைகள் கல்வித்துறை அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபப்படாமல் இருப்பது மற்ற ஆசிரியர்களிடத்தில், வேதனையை ஏற்படுத்துகிறது. இதனால், பிரச்னை ஏற்படும் போது, அதற்கு முறையான தீர்வு கிடைக்காது என்ற சூழ்நிலையால், சில பள்ளிகளில் ஆசிரியர்கள் வேறுவழியின்றி பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது. ஆசிரியர்களுக்கிடையே நடக்கும் பிரச்னையாக இருப்பினும், அதனால், அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான்.

ஆசிரியர்களுக்கு கல்வி கற்பிப்பது, மாணவர்களை வழிநடத்துவது உட்பட கல்வி ரீதியாக மட்டுமே பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஆசிரியர்கள் மனதில் விதைப்பதற்கு முன்னர், அவர்களுக்கு ஏற்படும் மன ரீதியான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதும் அவசியமாக உள்ளது.

இவ்வாறு ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்குவதால், மாணவர்களும் தெளிவான பாதையில் வழிநடத்தப்படுவர். மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்று ஆசிரியர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


'கல்வித்துறை அறிவிக்க வேண்டும்'

கோவை மண்டல உளவியல் நிபுணர் அருள் வடிவு கூறியதாவது:
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கையாளுவது குறித்து அறிவுரை வழங்கப்படுகிறது. இருப்பினும், தனியாக ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது குறித்து எந்த உத்தரவும் இல்லை. கல்வித்துறை
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement