Ad Code

Responsive Advertisement

தேசிய அளவிலான கற்பித்தல் போட்டி: நீலகிரி அரசுப் பள்ளி ஆசிரியர் தேர்வு

தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கற்பித்தல் போட்டிக்கு, நீலகிரி மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (33). இவர், தேனாடு அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 

தொழில்நுட்பம் சார்ந்து, மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.மக்கள்தொகை குறைவான இந்தக் கிராமத்தில் சிறப்பான கல்வி சேவையாற்றியதற்காக,கற்பித்தலில் புதுமை படைக்கும் தேசிய அளவிலான ஆசிரியர் விருதை, 2010-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியது. மாணவர்களிடையே கற்றல் ஆற்றலை தூண்டும் வகையிலான ஓவியங்களை, பள்ளி வளாகத்தின் சுவர்கள், வகுப்பறைகள் என அனைத்து இடங்களிலும் அலங்கரித்துள்ளார்.

இவரின் ஓவியப் பயிற்சியின் பலனாக, கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை மாநில அளவிலான ஓவியப் போட்டிகளில் அப்பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர்.சமச்சீர் பாடத் திட்டத்தின் கீழ், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாடத் திட்டத்தை, நவீன தொழில்நுட்பத்தில் மாற்றி மாணவ, மாணவிகள் எளிதாக கற்கும் வகையில் ஒலி, ஒளி அடிப்படையில் வீடியோ பாடங்களாக மாற்றியுள்ளார். 

அதன்படி, கழிவுநீக்க மண்டலம், சிறுநீரகத்தின் அமைப்புப் பணி மற்றும் வேலை, இருவித்திலை தாவர அமைப்பு, வேரின் அமைப்பு மற்றும் பணி, தனிம வரிசை அட்டவணை, காடுகள் மற்றும் வன விலங்குகள் உட்பட பல்வேறு பாடங்களை ஒலி, ஒளி காட்சிகளாக மாற்றி கற்பித்து வருகிறார்.இந்தத் திட்டத்துக்கு, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.


தேசிய போட்டிக்கு தகுதி


இதனிடையே இந்திய அரசால் ஆசிரியர்களுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று, வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, குடியரசுத்தலைவர் விருது வழங்கி கவுரவிப்பார்.இதுதொடர்பாக ஆசிரியர் தர்மராஜ் கூறும்போது, “இந்தப் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து என்னுடன் சேர்த்து 6 போ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கணினி மட்டுமின்றி, நவீன ஆன்ட்ராய்டு செல்போன் மூலமாக கல்வி மென்பொருளை பயன்படுத்தி, தமிழ் அகராதி, வார்த்தை உச்சரிப்பு, திருக்குறள் வாசிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறேன்” என்றார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement