Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் பட்டயப்படிப்பில் ஆர்வம் குறைவு: கோவையில் இரு பயிற்சி பள்ளிகள் மூடல்.

கோவையில், நடப்பு கல்வியாண்டில், ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பின் மீது ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்துள்ளதால், இரண்டு அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திக்கொண்டுள்ளது. 

தமிழகத்தில், 440 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு இணைய தளம் வழியாக துவங்கியது; 4ம் தேதி நிறைவு பெறுகிறது. கோவை மாவட்டத்தில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் திருமூர்த்தி நகர், ஆசிரியர் பயிற்சி பள்ளி ராஜவீதி ஆகியவற்றில், 140 இடங்கள் உள்ளன. ஆனால், மொத்தமே, 131 மாணவர்களே விண்ணப்பித்து இருந்தனர். ராஜவீதி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நேற்று காலை, 9:00 மணிக்கு முதல்வர் திருஞானசம்மந்தன் தலைமையில் கலந்தாய்வு துவங்கியது. முதல் நாளான நேற்று, ஆங்கில மீடியத்திற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நடந்தது. முதல்கட்ட கலந்தாய்வில், 13 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 8 பேர் பங்கேற்றனர். குறிப்பாக, ஆசிரியர் பயிற்சி, பட்டயப்படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்ததன் காரணமாக நடப்பு கல்வியாண்டில், அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளி கருமத்தம்பட்டி, மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திக் கொண்டுள்ளன. திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தன் கூறுகையில், ''முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முடிந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொழில் பிரிவுக்கும், கலை பிரிவுக்கும் நடக்கிறது. கலந்தாய்வில், பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும்,'' என்றார். மாயமாகும் பள்ளிகள்:கடந்த, 2011ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையின் போது, தமிழகத்தில், 682 ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல்பாட்டில் இருந்தன.இதில், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தன. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், 242 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு, நடப்பு கல்வியாண்டில், 440 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி பள்ளிகள் இல்லாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement