கடந்த கல்வியாண்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட, தற்போதுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, அதிக அளவில் உள்ளதால், நடப்பு கல்வியாண்டில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.
ஓய்வு:
கடந்த மே 31ம் தேதி, தமிழகம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இப்பணியிடங்களுக்கு, தகுதித்தேர்வு நடத்தி, விரைவில் பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர் கல்வி படித்து, வேலைக்கு காத்திருப்போரிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகளில், பணிநிரவல் நடத்துவதற்காக, 1 முதல், 5ம் வகுப்பு வரை, 1:30 என்ற விகிதத்திலும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, 1:35
என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்திலும், கடந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை அடிப்படையில், கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.இவற்றில், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையை விட, அதிக அளவில் உள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், பணிநிரவல் நடத்தினால், அனைத்து தகுதியான ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பினால் கூட, உபரி ஆசிரியர் பணியிடம் நீடிக்கும் நிலை உள்ளது.
நிர்பந்தம்:
இதனால், இந்தகல்வியாண்டில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது:கடந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. அதனால், உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர் நியமனம் நடைபெற்றது. உதாரணமாக, ஒரு பள்ளியில் பணிநிரவலுக்கு கணக்கெடுக்கும் போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு, ஐந்து ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால், அங்கு, எட்டு ஆசிரியர் பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்த உபரியாக உள்ள, மூன்று பணியிடங்களை முறையாக நீக்கியிருப்பின், கடந்த கல்வியாண்டில் புதிய ஆசிரியர் நியமனம், வெகு சொற்பமாகவே இருந்திருக்கும். தேர்வு எழுதி காத்திருப்போரை ஏமாற்றம் செய்யக்கூடாது என்பதற்காக, உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது.கடந்த கல்வியாண்டு இறுதியில், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில், தற் போது பணிநிரவல் நடத்தப்பட்டால், மேற்கண்ட உபரி ஆசிரியர் பணியிடங்கள் குறையும்.
அதே சமயம், பல ஆசிரியர்களுக்கு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலை கூட உருவாகும். அப்போதும், உபரி ஆசிரியர் பணியிடங்களை முற்றிலும் நீக்க முடியாது. இதனால், காலி ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், அரசு பள்ளிகளில் ஆண்டுக்காண்டு, மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதால், நடப்பு கல்வியாண்டில், உபரி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை கூடவும் வாய்ப்புள்ளது. இந்த காரணங்களால் தான், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுவதும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை