Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 37 ஆயிரம் பேர்!

தமிழகத்தில் 37,500 குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது.  அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 37,500 பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

 இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறியது:

தமிழகத்தில் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் மாவட்டங்களில்தான் பள்ளி செல்லாத குழந்தைகள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

மாநிலத்துக்குள்ளேயே இடம்பெயரும் தொழிலாளர்கள் காரணமாக விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர், பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்து இங்கு குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்காக ஹிந்தி, ஒரியா உள்ளிட்ட மொழிகளில் பாடங்களை நடத்துவதற்கான ஆசிரியர்களும் தன்னார்வ அமைப்புகளின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் ஏராளமான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அவர்களின் குழந்தைகளுக்காக தெலுங்கு மொழியிலும் பாடங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்து சேலம், ஈரோடு பகுதிக்கு இடம்பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்லாமல் உள்ளனர். இவர்கள் பருத்தி சீசனில் ஆண்டுக்கு 3 அல்லது 4 மாதங்கள் தங்களது குழந்தைகளுடன் சென்றுவிடுவதால், அவர்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.

சென்னை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1,250-ஆக உள்ளது. கட்டுமானப் பணிகள், சாலையோரங்களில் வசிப்பவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை.

இந்தக் குழந்தைகளில் 33,000 பேரை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படுவர் என்று அவர்கள் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement