Ad Code

Responsive Advertisement

மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது: சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன

தமிழ்நாட்டில் மொத்த 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரியில் மொத்தம் உள்ள 2655 இடங்களில் 15 சதவீதம் (398 இடங்கள்) அகில இந்திய அளவில் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 2257 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனை கட்டிட அரங்கில் இன்று தொடங்கியது. மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி கவுன்சிலங்கை தொடங்கி வைத்தார்.

இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. மொத்தம் உள்ள 76 எம்.பி.பி.எஸ் இடங்கள், ஒரு பி.டி.எஸ்.இடங்களை நிரப்ப 88 மாணவ – மாணவிகளுக்கு இன்று அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
இதில் மாற்றுதிறனாளிகளுக்கு 68 இடம் ஒதுக்கப்பட்டது. ராணுவ பிரிவில் 5 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும், பல் மருத்துவ படிப்பில் ஒருவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
குளு – குளு வசதி செய்யப்பட்டிருந்த ஓமந்தூரார் மருத்துவமனை அரங்கில் கவுன்சிலிங் நிலவரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 4 எல்.ஈ.டி திரைகளும், அரங்கிற்கு வெளியே 4 எல்.ஈ.டி திரைகளும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அமரும் கூடத்தில் 4 எல்.ஈ.டி. திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
மாணவர்கள் வரைவோலை எடுக்கவும், பணம் செலுத்தவும் தற்காலிகமான கணினி மயமாக்கப்பட்ட வங்கி வசதியும் செய்யப்பட்டு இருந்தது. ஒரே நேரத்தில் 5 மாணவர்கள் அமர்ந்து தங்களின் கல்லூரியை தேர்வு செய்ய வசதியாக 5 கணினிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்ததால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தனி கூடம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேர்வு குழு செயலாளர் டாக்டர் உஷா செய்திருந்தார்.
நாளை பொது கவுன்சிலிங் தொடங்குகிறது. 25–ந் தேதி வரை நடைபெறும் முதல் கட்ட பொது கவுன்சிலிங்கின் போது தினமும் 600 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. காலை 9 மணி, 11 மணி, மதியம் 2 மணி என 3 கட்டமாக கவுன்சிலிங் நடைபெறும்.
இரண்டாவது கட்ட கவுன்சிலிங் ஜூலை 26, 27 ஆகிய தேதிகளும் 3–வது கட்ட கவுன்சிலிங் செப்டம்பர் 6–ந் தேதியும் நடைபெற உள்ளது. இதில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான 598 அரசு இட ஒதுக்கீடும் நிரப்பப்படும். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement