Ad Code

Responsive Advertisement

ஜெ., நாளை முதல்வராக பதவியேற்பு: சென்னை முழுவதும் அனைத்து துறையினரும் 'உஷார்'!!




                                  ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக நாளை, முதல்வராக பதவியேற்கிறார். இன்று பகல், 2:00 மணிக்கு, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதில், அ.தி.மு.க.,வினர் திரளாக கலந்து கொள்ள உள்ள தால், சென்னையில் போலீசார் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும், உஷார் நிலையில் உள்ளனர்.



விடுப்பு இல்லை:

கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், பெரிய அளவிலான விபத்து போன்ற அசம்பாவிதங்கள், ஜெயலலிதா பதவியேற்பின் போது நிகழ்ந்துவிடக் கூடாது என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் காவல் துறையில், காவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை, யாரும் தேவையில்லாமல் விடுமுறை எடுக்கக் கூடாது. சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கும் இது பொருந்தும். ரோந்து பணியில், தொய்வு கூடாது; 'லாக் - அப்' சாவு, கைதிகள்தப்பியோட்டம் உள்ளிட்ட சம்பவம் நிகழக் கூடாது. கவனக்குறைவாக நடந்து கொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், வெளிமாநில கூலிப்படையினர், கடத்தல்காரர்கள் ஊடுருவாமல் இருக்க எல்லைகளில் வாகன சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.போக்குவரத்து போலீசார், வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில் சிரத்தை எடுத்து செயல்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா செல்லும் பாதையில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க, தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

300 பேர் :

ஜெயலலிதா பதவியேற்பு விழா நடைபெறும், சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா அரங்கில், விழாவிற்கான ஏற்பாடுகளை, பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர். இப்பணியில், 200 பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ, கீழ்நிலை யில் உள்ள, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக, வெளிமாவட்டங்களில் இருந்தும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.இவர்கள் மேடை அமைத்தல், ஒலி, ஒளி வசதி செய்தல், விழா அரங்கை துாய்மைப்படுத்துதல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.குறுகிய காலஅவகாசமே இருப்பதால், பணிகளை விரைந்து முடிக்க, இரண்டு, 'ஷிப்ட்' அடிப்படையில், 24 மணி நேரமும் பணி நடந்து வருகிறது.

மின் வாரியம் தயார் :

முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் போது, மின்தடை ஏற்படாமல் இருக்க, தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள, சென்னை மத்திய மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர், உமா சங்கர் தலைமையில், ஆறு செயற்பொறியாளர்; 10 உதவி செயற்பொறியாளர், 34 உதவி பொறியாளர் என, 50 பேர், அரங்கிற்கு உள்ளேயும்; அரங்கிற்கு வெளியில், 50 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.முதல்வர் வரும் வழியெங்கும் சாலை செப்பனிடுதல், துப்புரவுப் பணி மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில், நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement