Ad Code

Responsive Advertisement

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்பது தவறான தகவல்

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்  நீக்கப்படும் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.  அப்படி எதுவும்  கிடையாது. அதேபோன்று, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும்  ஆதார் எண் அவசியம் இல்லை என்று தலைமை தேர்தல்  அதிகாரி கூறினார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் வாக்காளர்  பட்டியலை தவறுகள் இல்லாமல் சரி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்திலும் இந்த பணிகள் கடந்த  மாதம் முதல் நடைபெற்று வருகிறது. வீடு வீடாக வாக்குச்சாவடி ஊழியர்கள் பொதுமக்களிடம் விண்ணப்பம் அளித்து, ஆதார் எண், செல்போன் எண்,  இ-மெயில் முகவரி மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதாவது திருத்தம் இருந்தாலும் சரி செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 4வது இறுதி கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தமுள்ள 5.62 கோடி வாக்காளர்களில் இதுவரை 5  கோடியே 55 லட்சம் பேரிடம் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து தகவலும் பெறப்பட்டுள்ளது. இவர்களில் 70 சதவீதம் வாக்காளர்களின் விண்ணப்பங்கள்  கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் 100 சதவீதம் வாக்காளர்களிடம் கூடுதல்  தகவல் பெறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98.7 சதவீதம் பேரும், சென்னையில் 83 சதவீதம் பேரும் தகவல் அளித்துள்ளனர். இந்த இரண்டு  மாவட்டங்களிலும் மே மாதம் இறுதிக்குள் மீதமுள்ளவர்களிடமும் ஆதார் உள்ளிட்ட கூடுதல் தகவல் பெறப்பட்டு விடும். சென்னை மாநகராட்சி ஆணையர்  கேட்டுக் கொண்டால், கூடுதலாக ஒரு சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யும்.

இதைத்தொடர்ந்து, ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி குறித்த தகவல்களை கம்யூட்டரில் டேட்டா எண்டரி செய்யும் பணிகள் நடைபெற்று  வருகிறது. நேற்று வரை 5 கோடி பேரின் தகவல் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பட்டியலில்  உள்ள தகவல்களை இணைத்து பீடிங் (ஒப்பிட்டு பார்ப்பது) செய்யும் பணி தொடங்கி விட்டது. நாமக்கல், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 3 வாரங்களில் முடிய வாய்ப்புள்ளது. பீடிங் ஆபரேஷன்  பணியின்போது ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேல்பட்ட இடங்களில் இருந்தால் உடனடியாக தெரிய வரும். பின்னர் சம்பந்தப்பட்ட தகவல்  தெரிவிக்கப்பட்டு, தேவையில்லா இடங்களில் இருந்து அவரது பெயர் நீக்கப்படும்.

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அப்படி எதுவும்  கிடையாது. அதேபோன்று, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் ஆதார் எண் அவசியம் இல்லை. தற்போது, பொதுமக்களிடம் பெறப்படும்  ஆதார் எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட யாருக்கும் அளிக்காது. அது  தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே தெரியும். இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலை

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை பொதுமக்களிடம் இருந்து பெறுவதற்கான பணிகள் கடந்த இரண்டு மாதமாக இந்தியா  முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆனால் பல மாநிலங்களில் இந்த பணிகள் இன்னும் பாதி அளவுக்கு கூட நிறைவேற்றப்படவில்லை என்று  கூறப்படுகிறது. இந்தியா முழுவதுமே 35 சதவீதம் பணிகள்தான் முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 98.80 சதவீதம் பேரிடம் அதாவது 5  கோடியே 55 லட்சம் பேரிடம் கூடுதல் தகவல் பெறப்பட்டுள்ளது. இன்னும் 7 லட்சம் பேரிடம் மட்டுமே தகவல் பெற வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த  பணிகளில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், சூபர்வைசர், உதவி தேர்தல் அதிகாரி, தேர்தல் அதிகாரிகள் பற்றிய தகவல்களை தேர்தல்  ஆணையத்துக்கு தெரிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சந்திப் சக்சேனா கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல்?

கடந்த வாரம் சென்னை மாவட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா  ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு வசதியாகத்தான் வெற்றிவேல் ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது. வருகிற செப்டம்பர் அல்லது  அக்டோபர் மாதம் பீகார் மாநில இடைத்தேர்தலுடன் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் நிருபர்கள் நேற்று கேட்டபோது அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது என்று நான் கடந்த வாரமே தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி விட்டேன். ஒரு தொகுதி எப்போது  காலியாகிறதோ அன்றில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படி, கடந்த 17ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதி  எம்எல்ஏ ராஜினாமா செய்தார். நவம்பர் 16ம் தேதிக்குள் அங்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை தேர்தல்  ஆணையம் தான் இறுதி முடிவு செய்து அறிவிக்கும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement