Ad Code

Responsive Advertisement

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் இந்திய அளவில் சென்னை மாணவர் சிறப்பிடம்: தமிழகத்தில் 97.06 சதவீதம் பேர் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் அகில இந்திய அளவில் சென்னை மாணவர் எஸ்.நிஷோக் குமார் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் இந்தத் தேர்வில் 500-க்கு 494 மதிப்பெண் பெற்றுள்ளார். கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் தலா 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 97, கணினி அறிவியலில் 100 மதிப்பெண்களும் அவர் பெற்றுள்ளார்.

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில் நாடு முழுவதும் 82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலம் 91.14 சதவீதத் தேர்ச்சியுடன் நாட்டிலேயே இரண்டாவது இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 11,902 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 11,552 மாணவர்கள் ( 97.06 சதவீதம்) தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

 இந்தத் தேர்வில் புதுதில்லி நியூ கிரீன் பீல்டு பள்ளி மாணவி எம்.காயத்ரி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
 இவருக்கு அடுத்ததாக மூன்று மாணவர்கள் 495 மதிப்பெண்களும், சென்னை மாணவர் நிஷோக் குமார் உள்பட 3 பேர் 494 மதிப்பெண்களும் எடுத்து சிறப்பிடம் பெற்றனர்.
 அகில இந்திய அளவில் மூன்றாவது இடம் பெற்றது குறித்து சென்னை முகப்பேரில் உள்ள டிஏவி சீனியர் செகண்டரி மேல்நிலைப் பள்ளி மாணவர் நிஷோக் குமார் கூறியது:-

 இந்த அளவு மதிப்பெண்களை பெறுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த மதிப்பெண்கள் ஆச்சரியத்தை அளிக்கிறது. கணிதப் பாடத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்றுக் கடினமாக இருந்தது. இருந்தாலும், இதில் 99 மதிப்பெண்கள் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
 ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விருப்பம். ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறேன். அதோடு, இசையிலும் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் எலெக்ட்ரானிக் கீபோர்டில் 8 கிரேடுகளை முடித்துள்ளேன், என்றார் அவர்.

 இந்த மாணவரின் தந்தை டி.என்.சுந்தரேசன், தாயார் எஸ்.சிவசுந்தரி. இருவரும் சிவில் என்ஜீனியர்களாக உள்ளனர். 
 இந்த மாணவர் சென்னை மண்டலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
 சென்னை நங்கநல்லூரில் உள்ள மாடர்ன் சீனியர் செகன்டரி பள்ளி மாணவர் அதுல் சுதர்ஷன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
 இது தொடர்பாக அவர் கூறியது:-

 வேதியியல் பாடத்தில் எனக்கு முழு ஆர்வம். அதனால்தான் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தேன். வேதியியல் பொறியியல் படிக்க விரும்புகிறேன். ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதியுள்ளேன். இடம் கிடைத்தால் ஐ.ஐ.டி.யிலும், இல்லையென்றால் திருச்சியில் உள்ள என்.ஐ.டி.யிலும் வேதியியல் பொறியியல் படிக்க உள்ளேன், என்றார் அவர்.
 இவர் வேதியியலில் 100 மதிப்பெண்களும், இயற்பியல், கணினி அறிவியலில் தலா 98 மதிப்பெண்களும், சம்ஸ்கிருதத்தில் 98 மதிப்பெண்களும் எடுத்துள்ளார். இவரது தந்தை சாய்நாத், தாயார் ஜானகி சாய்நாத்.

 முகப்பேர் டிஏவி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் ஹரிஹரன் 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் இயற்பியல், கணினி அறிவியலில் தலா 100 மதிப்பெண்களும், வேதியியல் -96, ஆங்கிலம்-96, கணிதம்-97 என மொத்தம் 489 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை ஜெயக்குமார் சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்ததாரராகப் பணியாற்றுகிறார். 
 இது குறித்து ஹரிஹரன் கூறியது:

 பெற்றோர், ஆசிரியர் ஊக்கத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. ஆசிரியர்கள் திறமையைக் கண்டறிந்ததோடு, படிப்பதற்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். இதனால் இயல்பாக படிக்க முடிந்தது. எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் துறையில் புது யுக்திகளை கொண்டு வருவதற்கு படிக்க விரும்புகிறேன், என்றார் அவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement