Ad Code

Responsive Advertisement

ஓய்வூதியதாரர்களுக்கு நிதித் துறை புதிய உத்தரவு

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிப்பது தொடர்பாக, நிதித் துறை புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.  இதுகுறித்து, தமிழக நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

 தமிழக அரசுத் துறைகளிலும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வோர் ஆண்டும் தங்களது வாழ்வுச் சான்றிதழுடன், மறுபணி நியமனம், மறு திருமணம் ஆகியன செய்யவில்லை என்பதற்கான சான்றையும் அளிக்க வேண்டும்.
 இதற்கென தனியான வரையறுக்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ளன. இந்தச் சான்றிதழில் சான்றொப்பம் அளிக்க, அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால் அந்த நடைமுறைக்குப் பதிலாக இப்போது புதிய நடைமுறையைப் பின்பற்றலாம் என கருவூலம்- கணக்குத் துறை, தமிழக அரசின் நிதித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
 அதன்படி, சான்றொப்பம் அளிக்க அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெறுவதற்குப் பதிலாக, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்களே சுய சான்றொப்பமிட்டு சான்றிதழை அளிக்கலாம் என கருவூலம்- கணக்குத் துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.
 இந்தப் பரிந்துரையை ஏற்று ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும், தாங்கள் மறுபணி நியமனமோ அல்லது மறுதிருமணமோ செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை அவர்களே சுய சான்றொப்பமிட்டு அளிக்கலாம். இந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையும், அதற்கான முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களைச் சார்ந்தது என்று நிதித் துறை செயலாளர் சண்முகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 இந்தக் கடிதமானது சட்டப் பேரவைச் செயலகம், ஆளுநர் மாளிகை, துறை அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement