Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு; நீலகிரி மாவட்ட கல்வித்துறை கவலை

நீலகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, கல்வி அதிகாரிகள் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், நீலகிரி மாவட்டம், 94.05 சதவீத தேர்ச்சி பெற்றது. 'கடந்தாண்டை விட, இது ஒரு சதவீதம் அதிகம்' என, கல்வித் துறையினர் கூறினாலும், அரசுப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறைவு, என்பது அவர்களை கவலையடைய செய்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள, 84 அரசு பள்ளிகளில், 3,609 பேர் மட்டுமே, பத்தாம் வகுப்பு தேர்வெதினர்; அதில், 3,131 பேர் தேர்ச்சி பெற்றனர்; இது, 86.76 சதவீதம். ஆனால், 29 அரசு உதவி பெறும் பள்ளிகளில், 3,082 பேர் தேர்வெழுதினர்; 2,927 பேர் தேர்ச்சி பெற்றனர்; இது, 94.97 சதவீதம். குன்னுார், கூடலுார் என, இரு கல்வி மாவட்டங்களில், குன்னுார் கல்வி மாவட்டத்தில், 50 ஆண்டு பழமை வாய்ந்த, உரிய கட்டமைப்புகளை கொண்டுள்ள அரசுப் பள்ளிகளில் கூட, ஒற்றை, இரட்டை இலக்க எண்களில் தான், மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுதியுள்ளனர்.

குன்னுார் அரசுப் பள்ளியில், 16 பேர், ஊட்டி பள்ளியில், 21, உபதலை, கன்னேரி மந்தனை, சோலுார் பள்ளியில் தலா, 18, நெடுகுளாவில், 14, இத்தலாரில், 12, எல்லநள்ளி பள்ளியில், 5, இடுஹட்டி, ஈளாடா அரசுப் பள்ளிகளில் தலா 4 பேர், என, பெரும்பாலான பள்ளிகளில், 20க்கும் குறைவான மாணவ, மாணவியரே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளனர்.

தொடரும் முயற்சி : அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், கல்வித் தரத்தை உயர்த்த, ஆங்கில வழி போதனை, காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என, பல்வேறு முயற்சிகளை கல்வித் துறை அதிகாரிகள் கையாண்டனர்; விளைவு, தேர்ச்சி விகிதம் எகிறியது. இருப்பினும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒற்றை, இரட்டை இலக்க எண்களில் மாணவர்கள் தேர்வெழுதியதும், உயர்நிலைப் பிரிவில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவதும், கல்வி அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.

முதன்மை கல்வி அதிகாரி கணேச மூர்த்தியிடம் கேட்ட போது, “அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம், தேர்ச்சி விகிதம் உயர்ந்து வருகிறது. மாணவர் எண்ணிக்கை குறைவது, வருத்தமளிக்கிறது; நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, வீடு, வீடாக சென்று 'கேன்வாஸ்' செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்,” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement