Ad Code

Responsive Advertisement

வி.ஐ.டி. பொறியியல் நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு

வேலூர் விஐடியில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வின் தரவரிசையில் தெலங்கானா மாநில மாணவர் கார்த்திகேய சர்மா முதலிடம் பெற்றார்.

விஐடியில் 2015-16-ஆம் ஆண்டுக்கான பி.டெக் பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 8 முதல் 19 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு இந்தியா, துபை, குவைத் உள்பட நாடுகளில் 112 நகரங்களில் 134 மையங்களில் கணினி முறையில் நடத்தப்பட்டது. இதில் 2.02 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இதன் முடிவுகளை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வியாழக்கிழமை வெளியிட்டார். துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தேர்வு முடிவுகளை 10 இணையதளங்களில் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நுழைவுத் தேர்வு முடிவுகள் குறித்து ஜி.விசுவநாதன் கூறியது:

நுழைவுத் தேர்வில் முதல் 10 இடங்களில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் கார்த்திகேய சர்மா முதலிடத்தையும், குஜராத் மாநில மாணவர் ஆர்சிட் குப்தா இரண்டாம் இடத்தையும், தில்லி மாணவர் சாகர் கோயல் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

11-ல் கவுன்சலிங் தொடக்கம்

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாடப் பிரிவுகலில் சேருவதற்கான கவுன்சலிங் தரவரிசை அடிப்படையில் விஐடியின் வேலூர், சென்னை வளாகங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

1 முதல் 8,000 வரையிலான தர வரிசையில் இடம்பெற்ற மாணவர்களுக்கு மே 11-ஆம் தேதியும், 8,001 முதல் 12,000 வரையிலான தர வரிசையில் இடம்பெற்ற மாணவர்களுக்கு 12-ஆம் தேதியும், 12,001 முதல் 16,000 வரையிலான தர வரிசையில் இடம்பெற்ற மாணவர்களுக்கு 13-ஆம் தேதியும், 16,001 முதல் 20,000 வரையிலான தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு 16-ஆம் தேதியும் கவுன்சலிங் நடைபெறுகிறது.

சிறப்புச் சலுகை

மாநிலக் கல்வி வாரியம், மத்தியக் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு 100 சதவீத இலவச படிப்பு கட்டணச் சலுகையுடன் அனுமதி வழங்கப்படும். விஐடி நுழைவுத் தேர்வில் 1 முதல் 50 வரையிலான தர வரிசையில் இடம்பெற்றவர்களுக்கு 75 சதவீதம் கட்டணச் சலுகையும், 51 முதல் 100 வரையிலான தர வரிசை பெற்றவர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கப்படும். 101 முதல் 1000 வரையிலான தர வரிசையில் இடம்பெற்றவர்களுக்கு 25 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும்.

ஸ்டார்ஸ் திட்டம்

விஐடியின் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் படித்து வருவாய் மாவட்ட அளவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பெறும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு (விஐடி நுழைவுத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு) பி.டெக். பட்டப் படிப்பில் அனுமதி, விடுதி வசதி, உணவு வசதி ஆகியன இலவசமாக வழங்கப்படும் என்றார் விசுவநாதன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement