Ad Code

Responsive Advertisement

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்புப் பணி: மே 30-க்குள் முடிக்க உத்தரவு

சென்னையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை வருகிற 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை இணைத்து, அந்த பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இந்தப் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் தற்போது சுமார் 38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து தகவல்களைச் சேகரிக்கும் பணியை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டும் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியை மே 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: சென்னையில் தற்போது சுமார் 38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் இன்னும் ஆதார் அட்டையைப் பெறாமல் உள்ளனர். மேலும் சிலர் வீடு மாறி சென்றுள்ளனர். இதனால் ஆதார் அட்டை இல்லாதவர்களிடமும் இடம் பெயர்ந்தோரிடமும் விவரங்களைச் சேகரிக்க முடியவில்லை. இருப்பினும் இதுவரை சுமார் 18 லட்சம் பேரிடம் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன. சென்னையில் ஆதார் எண் உள்ள வாக்காளர்கள் அனைவரிடமும் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை மட்டும் ஏறத்தாழ 30 ஆயிரமாக உள்ளது. இவர்களிடம் விவரங்களைச் சேகரிப்பது கடினம். மேலும் ஆதார் எண் இல்லாதவர்களிடம் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி மட்டும் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மே 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆணையர் விக்ரம் கபூர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் பணிகளை முடிக்க தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. மேலும் மே 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமே கடைசி சிறப்பு முகாம். அதற்கு பின் சிறப்பு முகாம்கள் நடத்தப்படமாட்டாது.

இடம் பெயர்ந்தோரை தவிர்த்து சென்னையில் சுமார் 5 லட்சம் பேரிடம் மட்டுமே விவரங்களை பெற வேண்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement