Ad Code

Responsive Advertisement

ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் மே மாதத்தில் வெளியீடு

பல்வேறு பட்டப் படிப்புகள் குறித்த தெளிவான புரிதலை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் சேகரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அவை இறுதி செய்யப்பட்டு, மே மாதமே அந்த விவரங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள், தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளில் பல வகையான படிப்புகள், இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளில் கற்பிக்கப்படுகின்றன.

தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவை, உடனடி வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இதுபோன்று புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் புதியப் படிப்புகளை முடிக்கும் மாணவர்கள், அரசு பணியிலோ அல்லது ஆசிரியர் பணியிலோ சேர முடியாத நிலை ஏற்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தப் படிப்புகளை கணக்கில் கொள்வதே இல்லை.

உதாரணமாக, "அப்ளைடு எகனாமிக்ஸ்', "கணினி அப்ளிகேஷனுடன்' கூடிய வணிகவியல் படிப்பு, மொழியியல் படிப்புகள் என்பன உள்ளிட்ட கல்வித் தகுதிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பான தொடர் புகார்களைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரத்தை வெளியிட தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக கல்லூரி பட்ட படிப்புகள் குறித்த முழு விவரங்களை சேகரிக்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு, மூல பட்டப் படிப்பு, வேறு எந்தெந்த பட்டப் படிப்புகளுக்கு இணையானவை என இனம் காணப்பட்டு பிரிக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம், மாணவர் கல்லூரியில் சேரும்போதே, தான் சேரும் பட்டப் படிப்பு எதற்கு இணையானது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இது குறித்து தமிழ்நாடு உயர் கல்வி மன்ற உறுப்பினர் செயலர் கரு. நாகராஜன் கூறியது:

ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

பணிகள் முழுமையாக நிறைவுபெற்ற உடன், ஒவ்வொரு படிப்புக்கும் தனித் தனி நிபுணர்கள் மூலம் கருத்துக்கள் கேட்கப்பட்டு சீர்படுத்தும் பணி நடைபெறும். இப் பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும்.

பின்னர் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, மாணவர்களின் பார்வைக்காக மே மாதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement