Ad Code

Responsive Advertisement

மழலையர் பள்ளிகளுக்கான விதிமுறைகள்: இறுதி செய்ய அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்

மழலையர் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பான விதிமுறைகளை இறுதி செய்ய, அரசு தரப்பில் அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.


நேரில் ஆஜராக வேண்டும்:

விதிமுறைகளை இறுதி செய்யவில்லை என்றால், பள்ளி கல்வித் துறையின் முதன்மை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த, பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில், 760 மழலையர்கள் பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்குகிறது. இந்த பள்ளிகளை மூட வேண்டும். அப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, அங்கீகாரம் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்' என, கூறப்பட்டது. இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்', மழலையர் பள்ளிகளின் விவரங்கள், அவற்றோடு தொடர்புடைய சுற்றறிக்கைகளை இணையதளத்தில் வெளியிடும்படி, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி பெற தேவையான அம்சங்களை தெரிவிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிடக் கோரி, தனியார் பள்ளி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

தீவிர பரிசீலனை:

அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், ''மழலையர்கள் பள்ளி, நர்சரி பள்ளி, தொடக்கப் பள்ளிகளுக்கான நகல் விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளன; மேலும், ஆறு வார அவகாசம் வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

கூடுதலாக, ஆறு வார காலஅவகாசம் வேண்டும் என, அரசு தரப்பில் கோரப்பட்டுள்ளது. நீதிமன்றம் பலமுறை உத்தரவுகளை பிறப்பித்தும், அரசு தரப்பில், விதிமுறைகளை இறுதி செய்வதில் அதிக முக்கியத்துவம் காட்டுவதாக தெரியவில்லை. எனவே, அடுத்த விசாரணை தேதியின் போது, விதிமுறைகளை இறுதி செய்யவில்லை என்றால், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர், ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். விசாரணை, ஜூன் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement