Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம்: ஐகோர்ட் அறிவுரை

'மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம். கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது,' என அறிவுறுத்திய மதுரை ஐகோர்ட் கிளை, மது அருந்தியதால் வகுப்பில் அனுமதிக்க மறுத்த கல்லூரி நிர்வாக உத்தரவை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது.

சோழவந்தான் திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தங்கி ஒரு மாணவர் பி.ஏ.,(பொருளாதாரம்) மூன்றாம் ஆண்டு படித்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவர்கள் வெளியே சென்றுவர அனுமதிக்கப்படுகிறது. மார்ச் 15 ல் அம்மாணவர் மது அருந்தியிருந்ததாகக்கூறி வகுப்பிற்கு வரவும், இறுதி பருவத் தேர்வு எழுதவும் தடை விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாணவன், ''ஏற்கனவே தேர்வு கட்டணம் செலுத்தியுள்ளேன். தேர்வு எழுத அனுமதிக்காவிடில் எதிர்காலம் பாதிக்கப்படும். சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளில் நான் கல்லூரிக்கு திரும்பி வரவில்லை. வகுப்பில் பங்கேற்கவும், தேர்வு எழுத அனுமதித்தும் உத்தரவிட வேண்டும்,'' என மனு செய்தார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். கல்லூரி சார்பில், 'குருகுல முறையில் கல்லூரி நிர்வகிக்கப்படுகிறது. ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். ஒழுங்கு நடவடிக்கைக்குழு முன் ஆஜரான மனுதாரர், மது அருந்தியது தவறுதான் என வருத்தம் தெரிவித்து எழுதிக் கொடுத்துள்ளார். எந்த மாணவராக இருந்தாலும் ஒழுங்கீனமாக நடந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்,' என வலியுறுத்தப்பட்டது.

நீதிபதி: சுவாமி விவேகானந்தர், ''சில உணவுகளை சாப்பிட்டால் குதூகலம் உண்டாகும். மது அருந்தும்போது அவரது மூளை சுய கட்டுப்பாட்டில் இருக்காது,'' என்றார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ''மாணவர்கள் மாறுபட்டு சிந்திக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதுவே இளைஞர்களுக்கு சொல்லும் செய்தி,'' என்றார். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தரும் இக்கல்லூரி குருகுல முறையில் துவக்கப்பட்டது. இளம் தலைமுறையினர் கல்வியில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதைத் தவிர்த்து தேவையற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. ஒரு மாணவருக்காக கல்லூரியின் சட்டம், விதிகளை நீர்த்துப்போகச் செய்தால் அனைவரையும் பாதிக்கும் என்பது ஏற்புடையதே. மாணவர்கள் நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் எதிர்காலத்தில் தேசத்தை வழிநடத்தக்கூடியவர்கள். அவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம். இப்பிரச்னையில் விளக்கம் அளிக்க மனுதாரருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தவறை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துள்ளார். மனுதாரரின் தவறான நடத்தைக்கு அபராதம் விதிக்கலாம். அபராதம் விதித்தால் அதை மனுதாரரின் பெற்றோர் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதில் கோர்ட் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement