Ad Code

Responsive Advertisement

தனியார் மருத்துவமனையிலும் ஆர்.டி.ஐ.,

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், தகவலறியும் உரிமை சட்டத்தை (ஆர்.டி.ஐ.,) செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய தகவல் ஆணையம் (சி.ஐ.சி.,) வலியுறுத்தி உள்ளது. மேலும், நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை, தினசரி அடிப்படையில் பராமரித்து, அவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதனால், கவனக்குறைவான சிகிச்சையால், நோயாளி பாதிக்கப்படும் போது, நோயாளியின் முந்தைய மருத்துவ அறிக்கைகளை, மருத்துவர்கள் திருத்தும் விரும்பத்தகாத நடைமுறை முடிவுக்கு வரும். இதனால், நோயாளிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என, சி.ஐ.சி., தெரிவித்துள்ளது.
போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கைலாஷ் பிரசாத் சிங் என்பவர், கடந்த 2012ம் ஆண்டு நவம்பரில் இறந்தார். இதையடுத்து, அவரது மகன் பிரபாத் குமார், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், தந்தையின் மருத்துவ அறிக்கைகளை தருமாறு, மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரினார். ஆனால், அவரது கோரிக்கை மருத்துவமனை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள மத்திய தகவல் ஆணையம், ''மருத்துவ அறிக்கைகளை தர மறுத்துள்ளது, விரும்பத்தகாத முன்னுதாரணம். பெரும் பணத்தை செலவு செய்யும் நோயாளிகளுக்கு, அவரது மருத்துவ அறிக்கைகளை பெற உரிமை உள்ளது. தகவலறியும் உரிமை சட்டத்தின்படி, அரசு பொது மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளும், தேவையான தகவல்களை தர வேண்டியது அவசியம்'' என, தெரிவித்துள்ளது. எனவே, மனுதாரர் கோரிய அனைத்து அறிக்கைகளையும், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என, சி.ஐ.சி. ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement