Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்

பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான, மத்திய அரசின் புதிய மருத்துவத் திட்டம், தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக, 770 மருத்துவக் குழுக்கள் அங்கன்வாடி குழந்தைகளை பரிசோதித்து வருகின்றன. 

அதனால், அங்கன்வாடி குழந்தைகள் முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை, அனைவரும் பயன்பெறும் வகையில், மத்திய அரசு, 'ராஷ்டிரிய பால் சுவதஸ்சிய காரிய கிராம' என்ற, புதிய மருத்துவ பரிசோதனை திட்டத்தை அறிவித்துள்ளது.பயனுள்ள இந்த மத்திய அரசின் திட்டம், தமிழகத்திலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்காக, 385 வட்டாரங்களிலும், தலா இரு குழுக்கள் என, 770 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில், டாக்டர், செவிலியர், மருந்தாளுனர் மற்றும் ஓட்டுனர் இடம்பெற்று உள்ளனர். வட்டாரங்களுக்கான இரு குழுக்களில், ஒன்றில் ஆண் டாக்டரும், மற்றொன்றில், பெண் டாக்டரும் இடம் பெற்றிருப்பர். இந்த குழுக்கள், தற்போது அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளை பரிசோதிக்கும் பணியைத் துவக்கி உள்ளன.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:பள்ளி குழந்தைகளின் உடல்நல பரிசோதனை திட்டம், தமிழகத்தில் ஏற்கனவே உள்ளது. மத்திய அரசின் புது திட்டத்தால், இவை மேலும் வலுவானதாக மாற்றப்பட்டு உள்ளது. 770 குழுக்கள் அமைக்கப்பட்டு, தற்போது, அங்கன்வாடி குழந்தைகள் பரிசோதிக்கும் பணி துவங்கி உள்ளது.

ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், அனைத்து பள்ளிகளிலும், இந்த குழு சென்று பரிசோதனை செய்யும். ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், அதற்கான மாத்திரைகள் தரப்படும். பிற சிறு பாதிப்புகளுக்கு, அங்கேயே சிகிச்சை அளிக்கப்படும்.வேறு ஏதேனும் நோய் பாதிப்புகள் கண்டறிந்தால், அரசு மருத்துவமனைகளில், உரிய சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக மருத்துவமனைகளில், தேவைக்கேற்ப பிரத்யேக பிரிவு துவக்க திட்டமிட்டு உள்ளோம்.

அதிக குழுக்கள் உள்ளதால், அங்கன்வாடிகள், பள்ளிகளில், நான்கு முறையாவது இந்த பரிசோதனை நடக்கும்; இளம் தலைமுறையினரை நோய் பாதிப்பின் பிடியில் சிக்காமல் காப்பாற்ற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement