Ad Code

Responsive Advertisement

வங்கிகளின் தொடர் விடுமுறை எதிரொலி: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 6-ந்தேதி தான் சம்பளம் கிடைக்கும்

 வங்கிகளின் தொடர் முறையால், தமிழகத்தில் உள்ள 15 லட்சம் அரசுஊழியர்களுக்கும் இந்த மாதம் 6-ந்தேதி தான் சம்பளம் கிடைக்க இருக்கிறது.


தொடர் விடுமுறை

2014-15-ம் நிதியாண்டு நேற்றுமுன்தினத்தோடு நிறைவடைந்தது. இதையடுத்து நிதியாண்டு கணக்கு வழக்குகள் முடிக்கப்பட்டு, அந்தந்த துறைகளின்சார்பில் மீதமுள்ள பணம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எப்போதும் அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதியன்றே சம்பளப்பணம் பட்டுவாடா செய்யப்படும். ஆனால் இந்த மாதத்துக்கான சம்பளப்பணம் இன்னும் அரசு ஊழியர்களுக்கு அந்தந்த துறைகளின் சார்பில் பட்டுவாடா செய்யப்படவில்லை. ஏனெனில். 2014-15-ம் நிதியாண்டு கணக்கு முடிக்கப்பட்ட நிலையில் நேற்று வங்கிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்றும், புனித வெள்ளியை முன்னிட்டு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர 4-ந்தேதியும், 5-ந்தேதியும் அரசு விடுமுறை நாட்களாகும். ஆனால் வங்கிகள் ½ நாள் இயங்கும் என்பதால், அன்று அரசு தன் ஊழியர்களுக்குசம்பளப்பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என்றாலும், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 6-ந்தேதி (திங்கட்கிழமை) தான் சம்பளம் கிடைக்கும்.

15 லட்சம் ஊழியர்கள்

தமிழக அரசில் அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 13 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தவிர உள்ளாட்சி நிறுவன ஊழியர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் உள்பட 2 லட்சம் பேர் உள்ளனர். ஆக மொத்தம் அரசு ஊழியர்களாக 15 லட்சம் பேர் பணியில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 6-ந்தேதி தான் சம்பளம் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை என்.ஜி.ஓ. சங்கத்தலைவர் சண்முக ராஜேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

வங்கி கணக்குகள்

சென்னையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் கூறியதாவது:-பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ந்தேதி சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். ஆனால் நேற்று விடுமுறை என்பதாலும், அடுத்த 2 நாட்களும் தொடர் விடுமுறை என்பதாலும் இந்த மாதம் 4-ந்தேதி (சனிக்கிழமை) சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பர்களுக்கு இன்று சம்பளம் செலுத்தப்பட்டு விடும். இதேபோல பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் 4-ந்தேதி சம்பளம் கிடைக்கும்.

கோரிக்கை

இதில் தபால் துறை ஊழியர்களுக்கு தங்கள் அலுவலகங்களிலேயே பணம் எடுத்துக்கொள்ள முடியும் என்பதால், அவர்களுக்கு வழக்கம்போல நேற்றே சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் ரெயில்வே, தபால்துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் 1½ லட்சம் பேர் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க மாத கடைசி நாளில் சம்பளம் பட்டுவாடா செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement