Ad Code

Responsive Advertisement

தமிழக - ஆந்திர எல்லையில் என்கவுன்டர் ; செம்மரம் கடத்திய 20 பேர் சுட்டுக்கொலை!

 தமிழக - ஆந்திர எல்லையில் செம்மரங்கள் வெட்டி கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 12 பேர் என கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஆந்திராவில் திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டி கடத்தும் கும்பல் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. செம்மரக்கடத்தலில் சர்வதேச பின்னணி உள்ளதாக ஆந்திர போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், குறிப்பாக ஆந்திராவில் விளையும் செம்மரக்கட்டைகளுக்கு சீனாவிலும், தெற்காசிய நாடுகளிலும் பெரிய அளவில் கிராக்கி உள்ளது. இதனால், சர்வதேச அளவிலான ஒரு மாபியா கும்பல், செம்மரக்கட்டைகளை வெட்டி, கடத்தி வருகிறது. ஆந்திராவி்ல் வெட்டப்படும் செம்மரங்கள் வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டு, சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாக வௌிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.இது தொடர்பாக ஆந்திர வனத்துறை, போலீசார்- கடத்தல் கும்பல் இடையே அவ்வப்போது சிறு, சிறு மோதல் நடக்கும். இந்த மோதல் இன்று உச்ச அளவிற்கு சென்றுள்ளது.



பலியானவர்கள் தமிழர்கள் : தமிழகத்தின் எல்லை பகுதியான ஈசகுண்டா, ஸ்ரீனிவாசமங்காபுரம் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்ததது. இதனையடுத்து போலீசார், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கடத்தல் கும்பலை போலீசார் எச்சரித்து பிடிக்க சென்றபோது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்த துவங்கினர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் செம்மரக்கடத்தல் கும்பலும் திருப்பி சுட்டது. இதில் சம்பவ இடத்தில் 20 பேர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.

கூலி தொழிலாளர்கள் : கொல்லப்பட்டவர்கள் கூலி தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது. மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுவோருக்கு சாதாரணமாக கூலியாக 500 வரை கிடைக்கும். ஆனால் இது போன்று செம்மரங்கள் வெட்ட செல்லும் போது அவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் காட்டுக்குள் மரம் வெட்ட செல்லும் தொழிலாளர்களுக்கு இதில் மறைந்துள்ள ஆபத்து தெரியாமல் போய் விடுகிறது. இதனால் தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் பலி கடா ஆக்கப்படுகிறார்கள்.



இறந்தவர்களில் பலர் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களர் என முதலில் தெரிய வந்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement