Ad Code

Responsive Advertisement

இலவச கட்டாய கல்வி குறித்து விளக்க அரசு பள்ளிகளில் ஆண்டு விழா - மாநில இயக்குனரகம் உத்தரவு

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி ஆண்டு விழா நடத்த வேண்டும், என அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 6 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகள் 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009யை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்படி, பள்ளி யில் இருந்து மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல், வாசித்தல், எழுதுதல், கேட்டல் பண்பை அதிகரித்தல், முப்பருவ திட்டம், பள்ளி உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் மாணவர், பெற்றோர், ஆசிரியர் தரப்பில் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், அனைவருக் கும் கல்வி இயக்ககம் சார்பில், பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தி, பெற்றோர், கிராம கல்விக்குழு, மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், மகளிர் குழு, குழந்தைகள் ஆகியோரை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஒருங்கிணைத்து இச்சட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என மாநில திட்ட இயக்குனரகம், தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

6 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகள் 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வசதியாக, பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தி, ‘இன்றைய கல்வி நாளைய வாழ்க்கை‘ என்ற தலைப்பில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நாடகம், சுகாதாரம், பரிசுப்போட்டி ஆகியவற்றை நடத்த வேண்டும். இதற்காக, 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிக்கு ரூ.2,250, ஆறு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிக்கு ரூ.1,600, ஒன்று முதல் பிளஸ் 1 வரை உள்ள மேல்நிலை பள்ளிக்கு ரூ.3,000, ஆறு முதல் பிளஸ் 2 வரை உள்ள பள்ளிக்கு ரூ.2,450 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆண்டு விழா நடத்துவதற்கான நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதால், சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர்த்து, 28 மாவட்டங்களில், அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆண்டு விழா நடத்துவது தொடர்பான தேதியை வெளியிட்டு நடத்த வேண்டும். அனைத்து தொடக்கப் பள்ளிகளும், அருகில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாக்களில் பங்கேற்க வேண்டும். பள்ளிக்களின் குழுக்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி பிரதிநிதிகளை கட்டாயம் பங்கேற்க வைக்க வேண்டும். ஆண்டு விழா முழுவதும், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் சாரம்சத்தை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும். விழாக்கள் நடத்தப்பட்டதற்கான ஆவணங்களை ‘சிடி’யில் பதிவு செய்து, மாநில திட்ட இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement