Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? 7வது சம்பள கமிஷன் விரைவில் பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

நாடு முழுவதும், 30 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். நாட்டில் நிலவும் விலைவாசிக்கேற்ப, இவர்களுக்கான சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க, சம்பளக் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிஷன், 10 ஆண்டு களுக்கு ஒருமுறை, தன் பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளிக்கும். இதன்படி, வரும் ஆகஸ்ட்டில், ஏழாவது சம்பளக் கமிஷன், தன் பரிந்துரையை அளிக்க உள்ளது.

சம்பளம் உயரும்:

இந்த பரிந்துரையில் சில திருத்தங்கள் செய்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும். இதனால், நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு கள், தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என, ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏற்கனவே, ஒவ்வொரு துறைகளைச் சேர்ந்தவர்களும், தங்களுக்கு தேவையான சம்பள உயர்வு, சலுகைகள் குறித்து, ஏழாவது சம்பளக் கமிஷனிடம் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசு ஊழியர் சங்கம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

*மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை, 26 ஆயிரமாக ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும்.

*மூன்று முறை பதவி உயர்வு என்ற நிலையை மாற்றி, முதல் நிலை அதிகாரிகள் போல், ஐந்து முறை பதவி உயர்வு வழங்க வேண்டும். 

*கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை, மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும். 

*'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு, முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். 

*தற்போது, 50 சதவீதமாக இருக்கும் ஓய்வூதியத்தை, 67 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவை உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதவிர, மத்திய அரசில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும், தனித்தனியாகவும், ஏழாவது சம்பளக் கமிஷ னிடம் அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளன. 

இந்திய வருவாய் துறையான, ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள், 58 பக்க மனுவை கொடுத்து உள்ளனர். இதுகுறித்து, ஐ.ஆர்.எஸ்., சங்க தலைவர் ஜெயந்த் மிஸ்ரா கூறியதாவது:பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து, வரித்துறை அதிகாரிகளை விட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கே அதிக சம்பளம் தரப்படுகிறது. முன், வரியை வசூலிக்கும் பொறுப்பு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் இருந்தது. 

நேர்முக வரி வருவாய்:

தற்போது நிலைமை மாறி விட்டது. நேர்முக வரி வருவாயை வசூலிக்கும் பொறுப்பை, நாங்களே கவனித்து வருகிறோம். 2001ம் ஆண்டை ஒப்பிடும் போது, 2014ல், நேர்முக வரி மூலம் கிடைத்துள்ள வருவாய், 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்த வருவாயை வசூலிப்பதற்கான செலவு, மிகவும் குறைவு. நாங்கள் வசூலிக்கும், ஒவ்வொரு, 100 ரூபாய்க்கும், 57 பைசா மட்டுமே அரசு செலவிடுகிறது. ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜப்பான் நாடுகள் வரி வசூலுக்காக செலவிடும் தொகையை விட, இது மிகக்குறைவு. எனவே, ஏழாவது சம்பளக் கமிஷனில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை விட, எங்களுக்கு கணிசமான சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். 

இதுபோல், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கம் சார்பிலும், 137 பக்க அறிக்கை தரப்பட்டு உள்ளது. அதில், 'நாடு முழுவதும், 4,720 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு நியாயமான சம்பள உயர்வு அளிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சம்பள கமிஷன்:

* 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சம்பளக் கமிஷன், தன் பரிந்துரையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும். 

*இந்த கமிஷன் அமைக்கப்பட்ட இரு ஆண்டுகளில், தன் பரிந்துரையை அரசிடம் அளிக்கும். 

*இந்த கமிஷனின் பரிந்துரைப்படி தான், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வு அளிக்கப்படும். 

*இதில் சில திருத்தங்களை செய்து, மாநில அரசுகளும், தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவிக்கும். 

*தற்போது, ஏழாவது சம்பளக் கமிஷன், சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் மாத்துார் தலைமையில், 2014ல் அமைக்கப்பட்டது. 

*இந்த கமிஷன், வரும் ஆகஸ்ட்டில் தன் பரிந்துரைகளை தாக்கல் செய்யும் என தெரிகிறது. 

*இந்த பரிந்துரைகள், அடுத்தாண்டு ஜன., 1ம் தேதி முதல், அமல்படுத்த வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement